கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார் கருணாநிதி ( வீடியோ இணைப்பு )

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை. கருணாநிதியின் வீட்டின் முகப்பில் வாழை மரம் கட்டப்பட்டு மலர் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மங்கள வாத்தியம் இசைக்கப்பட்டது.

காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார். மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர். காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர்.காலை 10.10 மணிக்கு கருணாநிதி தனது அறையில் இருந்து திருமணம் நடைபெற்ற இடத்துக்கு வந்தார். மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மணமக்கள் வாழ்க என்று மூன்று முறை கோ‌ஷம் எழுப்பப்பட்ட பிறகு கருணாநிதி தாலியை எடுத்துக் கொடுத்து 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

திருமண விழாவில் மு.க.அழகிரி, காந்தி அழகிரி, செல்வி குடும்பத்தினர், மு.க.தமிழரசு, ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துர்கா ஸ்டாலின், தயாநிதிமாறன், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம், முரசொலி செல்வம், கவிஞர் வைரமுத்து மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் சுமார் 15 நிமிடம் கருணாநிதி அந்த அறையிலேயே இருந்தார். அதன்பிறகு கருணாநிதியை வீல்சேரில் வைத்து வாசலுக்கு அழைத்து வந்தனர். வெளியில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்களை பார்த்த பிறகு மீண்டும் உள்ளே அழைத்து சென்றனர்.

உடல்நலக்குறைவால் கருணாநிதி கடந்த ஒரு ஆண்டாக ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் அமிர்தம் மணிவிழாவில் கருணாநிதி கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.ஒரு வருடத்துக்கு பிறகு கடந்த மாதம் 19-ந்தேதி முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார். தற்போது கொள்ளு பேரன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். திருமண விழாவில் பங்கேற்பதற்காக கருணாநிதி இன்று காலை 7 மணிக்கே எழுந்து விட்டார். பின்னர் குளித்து புத்தாடை அணிவித்து அவரது அறையிலேயே ஓய்வு எடுத்தார். மணமக்கள் வந்தபிறகு அவரது அறையில் இருந்து வெளியே வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். கருணாநிதிக்கு ஒவ்வாமை இருப்பதால் நோய் தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக குடும்பத்தினர் தவிர யாரும் திருமண விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

Facebook Comments