திருமணத்துக்குப் பின் தேவையில்லையா காதல்?

என்ன சொல்லி என்ன

என்ன எழுதி என்ன

நான் சொல்ல வருவதைத்

தவிர

எல்லாம் புரிகிறது உனக்கு.

-கனிமொழி

தட்டிக்கழியும் தாஜ்மகால்

‘சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம்’ என்ற செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்ததும், கையிலிருந்த வேலையைப் போட்டுவிட்டு சிலைபோல் நின்றாள் காயத்ரி. செய்தியில் உச்சரிக்கப்பட்ட தாஜ்மகால் என்கிற பெயரும் காட்சிகளாகக் காட்டப்பட்ட தாஜ்மகால் சித்திரமும் அவளை திக்பிரமை அடையச் செய்தன. கணவன், குழந்தைகள் உட்படத் தனது ஒட்டுமொத்த திருமண வாழ்க்கை மீதும் வழக்கம்போல் காயத்ரிக்கு எரிச்சல் வந்தது.

காயத்ரியும் மகேஷும் நெக்குருக காதலித்து கரம் பிடித்தவர்கள். காயத்ரிக்கு அவன் அளித்த முதல் காதல் பரிசு, ஓர் அழகான தாஜ்மகால் பொம்மை. கண்ணாடிப் பெட்டிக்குள் பளிங்குபோல் ஜொலித்த அந்த தாஜ்மகாலைத் தந்தபோது, கன்னத்து முத்தத்துடன் “திருமணமானதும் முதல் வேலையாக தாஜ்மகால் போகிறோம்” என்று உத்தரவாதமும் அளித்திருந்தான். ஆனால், திருமணத்துக்குப் பின் அந்த உறுதிமொழியை காயத்ரி பலவிதமாய் நினைவூட்டியும் தட்டிக்கழித்து வருகிறான்.

காதலில் முதல் பரிசாகக் கிடைத்த தாஜ்மகால், காயத்ரிக்குக் காதலின் சாட்சியாகச் சேர்ந்திருந்தது. காதல் கணவனின் கைப்பிடித்து தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க வேண்டும், தாஜ்மகால் பின்னணியில் அவன் மேல் சாய்ந்தவாறு படமெடுத்து வீட்டில் பெரிதாக மாட்ட வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டிருந்தாள். தொழில் நிமித்தம் நாடு முழுக்க அடிக்கடி பயணம் செய்யும் மகேஷுக்கு, காயத்ரியின் கனவை ஈடேற்றுவதில் சிரமம் எதுவும் இல்லை. ஆனால், அவனது குடும்பக் கடமைகளின் பட்டியலில் தாஜ்மகால் எங்கோ கீழே சரிந்திருந்தது.

அலங்கார அலமாரியில் வீற்றிருக்கும் அந்த தாஜ்மகால் பொம்மையை, இப்போது பார்த்தாலும் காயத்ரிக்குள் சின்னதாய் சிலிர்ப்பு தோன்றி மறையும். ‘உருகி உருகிக் காதலித்தவன் கணவனானதும் இப்படி மாறிப்போனானே’ திருமணமான இரண்டாவது மாதத்திலேயே காயத்ரி மசக்கை கண்டதும் ‘இப்போது நீண்ட பயணம் கூடாது’ என்றான். அப்படியே இரண்டாவது குழந்தையும் பிறக்க அதன் பிறகு அவர்களின் படிப்பு, சேமிப்பு, எதிர்காலம் என மகேஷுக்குக் குடும்பக் கவலைகள் விரிவடைந்தன.

தொழிலை விரிவுபடுத்தியதும், 3 படுக்கையறையுடன் வங்கிக் கடனில் வீடு கட்ட ஆரம்பித்ததும் ஆளே முற்றிலும் மாறிப் போனான். இன்றைக்கும் மனைவி மீது மாறாத காதலுடன் இருப்பதாகவே மகேஷ் சொல்கிறான். அந்தக் காதலின் அடையாளமாகப் பிறந்த இரண்டு குழந்தைகளுக்காகவும் குடும்பத்துக்காகவும் ஓடாகத் தேய்வதாகப் புலம்புகிறான். ஆனால், காய்த்ரி அதையெல்லாம் நம்பத் தயாராக இல்லை.

இடறியது எங்கே?

என்ன நடந்தது காயத்ரி – மகேஷ் தம்பதிக்குள்? காதலர்களாக எவ்வளவு கதைத்திருந்தும், இப்போது திருமண வாழ்வில் அது உதவவில்லையே. காரணம், அப்போது பேசியவற்றில் பெரும்பகுதி பிதற்றல்களே. உண்மையான புரிதல், யதார்த்தமான பகிர்வுகள் திருமணமான பிறகே தொடங்குகின்றன. நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்துக்கும் இடையிலான ‘கோர்ட்ஷிப் காலம்’ குறித்துத் தொடரின் ஆரம்பத்தில் பார்த்தோம், அதற்கு இணையான இன்னொரு ‘கோர்ட்ஷிப் காலம்’ திருமணமான முதல் வருடத்திலும் வந்துசெல்லும்.

இந்த இடத்தில்தான் காயத்ரி, மகேஷ் இடறினார்கள். திருமணமானதும் பொறுப்புள்ள குடும்பத் தலைவியாகப் பரிணமிப்பதை உள்வாங்க காயத்ரிக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. ஒரு காதலி மனைவியாகக் கனிவதற்குப் பதில் கன்றிப்போனாள். அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் எதிர்காலத்துக்கான பொருளாதாரத் தேடலில் மகேஷ் மூழ்கியது எனப் பல்வேறு விஷயங்களும் இருவருக்கும் இடையே தடைச்சுவராக எழுந்தன. கணவனின் சிரமங்கள் காயத்ரிக்குத் தெரிந்திருந்தாலும், புரிந்துகொள்வதில் பிசகினாள்.

தொடர் சொதப்பல்கள்

தம்பதிக்கு இடையே மட்டுமல்ல, புகுந்த வீட்டினர் மத்தியிலும் காயத்ரி சொதப்பினாள். காதலித்தபோது ‘மகேஷ்ஷ்ஷ்..’ என்று ஹஸ்கியாக காயத்ரி அழைப்பதை மிகவும் விரும்புவான். ஆனால், திருமணமானதும் இதற்காக காயத்ரியை அவள் மாமியார் கடிந்துகொண்டார். பொறுக்க முடியாத காயத்ரி தங்கள் நேச அடுக்குகளை மாமியாருக்கு விளக்க முயன்றாள்; வேலைக்குப் போகும் திமிரில் இப்படிப் பேசுவதாக காயத்ரி மீதே பாய்ந்தார் மாமியார்.

வீட்டுப் பெண்களுக்கு இடையே பிரச்சினை வளர்வதை விரும்பாத மாமனார், ‘புதிய வீட்டின் டைல்ஸ் அபாயகரமாய் வழுக்குகிறது’ என்று மனைவியுடன் ஊர் திரும்பினார். அவர்கள் சென்ற பிறகு குழந்தைகளைப் பராமரிக்கப் பெரியவர்கள் இல்லையென்று, காயத்ரி வேலையை விட வேண்டியதாயிற்று. அதனாலும் அவளுக்கு மன அழுத்தம் கூடிப்போய், கணவனுக்கு எதிரான கோபமாகவும் திருமண வாழ்வின் மீது சலிப்பாகவும் மாறியது.

காயத்ரியின் இந்தச் சங்கடங்களின் பின்னணியில் வேறு பல பிரச்சினைகளோ, தனி நபர்களோகூடக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், திருமண வாழ்வில் காத்திருக்கும் புதிய பொறுப்புகள் மற்றும் உறவுகள் குறித்து இருவரும் முன்கூட்டியே கலந்து பேசியிருந்தால், தற்போதைய சிரமங்களைக் குறைத்திருக்கலாம். தம்பதி இடையே ஈர்ப்பு அதிகமிருக்கும் ஆரம்ப நாட்களில், புதிய பொறுப்புகள் குறித்துப் பேசுவது பலனளிக்கும்.

தாஜ்மகாலுக்குத் தேனிலவு பயணம் செல்ல காயத்ரி அப்போதே அழுத்தம் தந்திருக்கலாம். அல்லது மகேஷ் சொல்வதுபோல குழந்தைகள் சற்றே வளரும்வரை காத்திருக்கலாம். பொது இடத்தில் கணவனைப் பெயரிட்டு அழைப்பதை விரும்பாத தனது தாயின் கட்டுப்பெட்டித்தனம் குறித்து மகேஷும் முன்கூட்டியே காயத்ரியிடம் உஷார்படுத்தி இருக்கலாம்.

தீபாவளி வர்த்தகத்தில் இலக்கை எட்டியதற்காக டெல்லியில் நடைபெறும் பாராட்டு விழாவுக்குக் குடும்பத்துடன் வருமாறு மகேஷின் அலுவலகம் இப்போது அழைப்பு விடுத்திருக்கிறது. அப்படியே ஆக்ரா பயணத்தையும் திட்டமிட்ட மகேஷ், காயத்ரிக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று விமான டிக்கெட்டுகளை பீரோவில் ஒளித்துவைத்திருந்தான். இங்கே அதே அறையில் கையிலிருந்த தாஜ்மகாலை வருடியவாறு கணவனுடனான புதுச் சண்டைக்குக் காரணம் தேடிக்கொண்டிருக்கிறாள் காயத்ரி. முடிவு சுபமாகட்டும்.

மனப் பொருத்தம் என்னும் மாமருந்து

இக்காலத் திருமணங்களில் பணப் பொருத்தமே பிரதானமாக அலசப்படுகிறது. ஆனால், அதி அவசியமான மனப் பொருத்தம் என்பது புது மணத் தம்பதியர் இடையிலான புரிந்துகொள்ளலிலும், விட்டுக்கொடுத்தலிலுமே வளரும். அதற்கு இருவரும் கால அவகாசம் அளிப்பதும் அவசியம். திருமண வாழ்வின் தொடக்கத்தில் அப்போதைய தொடக்கப் பிணைப்பை அடித்தளமாக்கி புரிதலைப் பலப்படுத்தும்போது மனப்பொருத்தம் கிட்டும். பின்னர் எழும் சச்சரவுகள், சங்கடங்களை இந்தப் புரிதலை அடிப்படையாக வைத்துக் கடந்து செல்வது எளிதாகும்.

பேசித் தெரிந்துகொள்ள வேண்டியவை

காதல் பருவத்து பாசாங்குகள் கணவன் மனைவியானதும் குறைந்திருக்கும். உணவு, உடை உள்ளிட்டவற்றில் ரசனை சார்ந்தும் ஒவ்வாமை குறித்தும் புரிந்துகொள்ளலாம். அவரவர் சிரமங்களையும் எதிர்பார்ப்புகளையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கலாம். தனித்தனியான கனவுகள், லட்சியங்கள் ஏதும் இருப்பின் அவை குறித்தும், குடும்பத்தின் பொதுவான இலக்கு குறித்தும், இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று உரசாது சமாளிப்பது குறித்தும் உரையாடலைத் தொடங்கி வைக்கலாம். உடல்நல பாதிப்புகள், ஏதேனும் மருந்துகள் உட்கொள்கிறாரா என்னும் மருத்துவ ஆவணங்கள் குறித்தும் பரஸ்பரம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

சரியான உறவுகளை இனம் காண்க

சுற்றத்தாருடன் ஆரம்ப நட்பை ஆரோக்கியத்துடன் தொடங்குவது அவசியம். இந்த உறவுகளில் சரியானவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் உறவைத் தொடர்வது எதிர்காலத்துக்கு மிகவும் உதவியாக அமையும். பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்ட அவசரகால உதவிகள், முக்கியப் பிரச்சினைகளில் முதிர்ச்சியான ஆலோசனைகள் ஆகியவை மட்டுமன்றி தம்பதிக்குள் உரசல் வரும்போது அதை ஆரம்பக் கட்டத்திலேயே சரிசெய்ய இந்த உறவுகளால் உதவ முடியும். குடும்ப மருத்துவர் போன்று தங்களை வழிநடத்துவதற்கு என இருவருக்கும் பொதுவான பெரியவர்களைத் தகவமைத்துக்கொள்வது இனிய இல்லறத்துக்கு நல்லது.

பொறுப்புகளைப் புரிந்து பகிர்ந்துகொள்ளுதல்

குடும்பத் தொழில் விவகாரங்கள், சொத்துக்கள், கடன்கள், வரவு செலவினங்கள் ஆகியவற்றை ஓரளவுக்கேனும் தெரிந்துகொள்ளலாம். கூட்டுக் குடும்பமாயின் அங்கு தன்னுடைய பொறுப்புகள், கடமைகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். சில கூட்டுக் குடும்பங்களில் ஒரு நிறுவன மாதிரியோ அரசியல் அடுக்கோ காணப்படும். அவற்றை அறிந்துகொள்வது சில்லறைப் பிரச்சினைகளைத் தடுக்கும். இவை தவிர கணவனும் மனைவியும் ஒன்றாக அமர்ந்து குழந்தைகள், சேமிப்பு, முதலீடு, வருமானம், எதிர்காலத் தேவைகள் குறித்து விவாதிக்கலாம். வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களில் முன்னெடுத்து செல்வதற்கு இந்த இனிய தொடக்கம் பேருதவியாக இருக்கும்.

எஸ்.எஸ். லெனின்
நன்றி: தமிழ் இந்து

Facebook Comments