15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல் அரக்கனின் படிமம்

15 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ‘கடல் அரக்கன்’ எனப்படும் ‘இச்தியோசர்’ முழு படிமம் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டைனோசர் காலத்தில் பிரமாண்ட மிருகங்கள், மீன்கள், பறவைகள், ஊர்வனங்கள் வாழ்ந்துள்ளன. காலப் போக்கில் இவை எல்லாம் அழிந்து விட்டன. இவை 15 கோடி ஆண்டுகளுக்கு முன் நிலத்திலும், நீரிலும் வாழ்ந்துள்ளன. இப்படிப்பட்ட பிரமாண்ட மிருகங்கள் பூமியில் வாழ்ந்தன என்பதை நிரூபிப்பதற்கான ஒரே ஆதாரமாக இப்போது இருப்பவை அதன் படிமங்கள்தான். பெரும்பாலும் வெளிநாடுகளில்தான் இந்த படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது மீன் போல் காணப்பட்டாலும், 19ம் நூற்றாண்டில் இது ஊர்வன விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. ‘கடல் அரக்கன்’, ‘நீந்தும் டைனோசர்’ என்றும் இவை அழைக்கப்பட்டன. இது 3 அடி முதல் 50 அடி நீளம் வரை வளர்ந்துள்ளன. டைனோசர் மிருகங்கள் அழிவதற்கு முன்பாகவே இது அழிந்து விட்டது.

இந்நிலையில், இந்தியாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ‘இச்தியோசர்’ என்ற உயிரினத்தின் முழு படிமத்தை குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியில் இந்தியா விஞ்ஞானிகள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர். ‘இச்தியோசர்’ என்பதற்கு கிரேக்கத்தில் ‘கடல் பல்லி’ என்று அர்த்தம். ஊர்வன வகையை சேர்ந்த இவை, கடலில் மிகவும் ஆழத்தில் வாழ்ந்துள்ளன. இது இப்போதைய ‘டால்பின்’ போன்ற உருவத்தை கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இது பல டன் எடையுடன் பிரமாண்ட உருவம் கொண்டது எனவும், வேட்டையாடும் வகையை சேர்ந்த இதன் வாய் மிகவும் நீளமாக நீண்டும், பற்கள் மிகவும் கோரமாகவும் காணப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி பல்கலைகழகத்தின் புவியியல் பிரிவை சேர்ந்த பேராசிரியர் குண்டுபள்ளி விஆர் பிரசாத் தலைமையில் கட்ச் பகுதியில் நடந்த ஆய்வில், இதன் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஜெர்மனியை சேர்ந்த ஆய்வாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இதுபற்றி பிரசாத் கூறுகையில், ‘‘இந்த படிமம் 18 அடி நீளம் கொண்டது. கிட்டத்தட்ட இச்தியோசரின் முழு உருவமும் இதில் உள்ளது. தலை மற்றும் வாலில் உள்ள சில எலும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் இதுபோன்ற படிமம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன், வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே இந்த உயிரினத்தின் படிமம் கிடைத்துள்ளது. இதன் மூலம், டைனோசர் கால உயிரினங்களின் பரிணாமம் இந்தியாவிலும் இருந்துள்ளது என்பது உறுதியாகி உள்ளது’’, என்றார்.

Facebook Comments