பின்லேடனின் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புக்களை வெளியிட்ட அமெரிக்கா

ஒசாமா பின் முகம்மது பின் அவாத் பின்லேடன் இதுதான் உலகையே நடுநடுங்க வைத்த பின்லேடனின் முழுப் பெயர். இவர் 1957-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி சவூதி அரேபியாவில், ஒரு பெரும் கோடீஸ்வரருக்கு பிறந்தார். 1988-ம் ஆண்டு அவர் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பைத் தொடங்கினார் பின்லேடன். இதன் காரணமாக அவரது சவூதி குடியுரிமை பறிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அமெரிக்காவின் வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கியதன் மூலம் உலகத்தையே உலுக்கினார். அன்று முதல் அமெரிக்கர்கள் உலகின் மிக மோசமான தீவிரவாதியாக அவரை பார்க்கத் துவங்கினர். அவர் அமெரிக்காவின் எதிரி ஆனார். இதையடுத்து, அவருக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்கள் நடத்த தொடங்கியது.

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் ரகசியமாக தங்கி இருந்தது அமெரிக்க படைக்கு தெரியவந்தது. இதையடுத்து 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி அமெரிக்க கமாண்டோ படையினர் ஹெலிகாப்டரில் சென்று அதிரடி தாக்குதல் நடத்தி பின் லேடனை கொன்றனர்.

இந்த தாக்குதலின் போது பின்லேடன் வைத்திருந்த கோப்புகளை அமெரிக்க ராணுவம் பறிமுதல் செய்தது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை வேறு எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், ஒசாமா பின்லேடன் சம்பந்தப்பட்ட சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் கோப்புகளை அமெரிக்க மத்திய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. பின் லேடனின் தனிப்பட்ட டைரி, கோப்புகள், ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் பின்லேடனின் மகன் ஹம்ஸா பின் லேடனின் திருமண வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

பின்லேடனின் கணினியிலிருந்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் மற்றும் கார்டூன் படங்களையும், பின்லேடன் குறித்த மூன்று ஆவணப்படங்களையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

Facebook Comments