பிரபாகரன் இறந்த செய்தி வந்த அன்று கருணாநிதி உடைஞ்சிட்டார்!- சண்முகநாதன் பேட்டி

தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் வலது கரமாக நிழலாகத் தொடரும் அவருடைய செயலர் சண்முகநாதன் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலில் அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியின் இறுதிப்பகுதியில் இலங்கை இறுதிப்போரில் நடந்த விடயங்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

கட்சி அளவில் அவரைப் பெரிதாக உலுக்கிய நிகழ்வு எது?

மூணு காலகட்டங்களைச் சொல்லலாம். முதலாவது, நெருக்கடிநிலைக் காலகட்டம். கட்சிக்காரங்களைக் கொத்துக் கொத்தா போலீஸ் சிறைக்கு அள்ளிக்கிட்டுப் போனதும் அவங்களைச் சித்திரவதைக்குள்ளாக்குனதும் கட்சியை முடக்குறதுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அவரை ரொம்பப் பாதிச்சுச்சு. இரண்டாவது, இலங்கைத் தமிழர்கள் விவகாரம். வெவ்வேறு காலகட்டத்துல அது அவரைக் கடுமையாப் பாதிச்சுதுன்னாலும், இறுதிப் போர் நடந்தப்போ தவிச்சுப்போனார். ராஜிநாமா செஞ்சுடலாம்னுகூட அப்போ முடிவெடுத்தார்.

‘இல்லை; இப்போ பதவி யிலேயும் கூட்டணியிலேயும் இருந்து கொடுக்குற அழுத்தத்தைக்கூட வெளியே போய்ட்டா இலங்கைக்குக் கொடுக்க முடியாது; இலங்கைத் தமிழர்களுக்குப் பேசுறதுக்கே ஆள் இல்லாமப் போய்டும்’னு சொல்லி பலர் அதைத் தடுத்தாங்க. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ரெண்டு பேரும் உறுதியா பேசுனதாலதான் நம்பி உண்ணாவிரதத்தை நிறுத்தினார். ஆனா, எல்லாம் அவர் கைமீறி நடந்ததையும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை யும் பார்த்தப்போ துடிச்சுப் போனார். பிரபாகரன் இறந்த செய்தி வந்த அன்னிக்கெல்லாம் உடைஞ்சுட்டார். மூணாவது, அலைக்கற்றை விவகாரம்.

அவருக்குத் தெரியாம பல விஷயங்கள் இதுல நடந்துட்டாலும், ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி முறைகேடுன்னு அபாண்டமா சுமத்தப்பட்ட பழியை எல்லோரும் திரும்பத் திரும்பப் பேசிப் பெரிசாக்கி, திமுகவை முடக்குறதுக்கான பெரிய சூழ்ச்சியா இதைக் கையாண்டப்போ கடுமையா பாதிக்கப்பட்டார்.

Facebook Comments