ஆட்டோ டிரைவருக்கு தினமும் அழைப்பெடுக்கும் பெண்களால் சிக்கல்

Advertisement

வங்கதேசத்தைச் சேர்ந்த திரைப்பட நட்சத்திரம் ஷாகிப் கான், மிகவும் புகழ்பெற்றவர். சமீபத்தில் இவர் மீது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். ஜூன் மாதம் வெளியான ஷாகிப் கானின் திரைப்படத்தில் ஒரு மொபைல் எண் காட்டப்பட்டிருக்கிறது. அந்த எண்ணுக்குரியவர் இந்த ஆட்டோ ஓட்டுநர். தன்னிடம் கேட்காமல், மொபைல் எண்ணைத் திரைப்படத்தில் பயன்படுத்தியதால் அவரது வாழ்க்கையே நிம்மதியிழந்து விட்டது என்கிறார்.

“ராஜ்நீதி என்ற திரைப்படம் வெளிவந்த அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு நிம்மதியே இல்லை. பொதுவாகத் திரைப்படங்களில் போலி எண்களைத்தான் காட்டுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் என்னுடைய மொபைல் எண்ணைக் காட்டிவிட்டனர். ஒரு நாளைக்குக் குறைந்தது 500 அழைப்புகளாவது வந்துகொண்டிருந்தது. எல்லோருமே ஷாகித் கானின் பெண் ரசிகைகள். ‘ஹலோ, ஷாகித் கான்… உங்களுடன் இரண்டு நிமிடங்கள் பேசலாமா?’ என்றுதான் ஆரம்பிக்கின்றனர். என்னால் பதில் சொல்லி முடியவில்லை. என் வாடிக்கையாளர்களுக்கு இந்த எண்ணைத்தான் கொடுத்திருக்கிறேன். இதனால் என்னுடைய தொழிலும் பாதிக்கப்பட்டது. இன்றுவரை 100 அழைப்புகளாவது வந்துகொண்டிருக்கின்றன. பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதால், என் மனைவி என்னைப் பற்றித் தவறாக நினைத்துவிட்டார். நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டேன். ஒரு வயதில் குழந்தையும் இருக்கிறது. எனக்குப் பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் பலரை ஏமாற்றுவதாகவும் கருதிவிட்டார் மனைவி. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவருக்கு என் மீது நம்பிக்கை வரவில்லை. ஒருநாள் குல்னா என்ற ஒரு பெண் என் மொபைல் எண் முகவரியை வாங்கிக்கொண்டு, 300 மைல்கள் பயணம் செய்து, வீட்டுக்கே வந்துவிட்டார். உடனே என் மனைவி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஒரு கிராமத்தில் உழைத்துச் சம்பாதித்து, நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தண்டனை? என்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு, வேறு வீட்டுக்குச் சென்றுவிட முடிவு செய்திருக்கிறேன். ஆனால் மொபைல் எண்ணை மட்டும் என்னால் மாற்ற முடியாது. பல ஆண்டு உழைப்பில் ஏராளமான வாடிக்கையாளர்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். இந்த எண் இல்லாவிட்டால் என் தொழில் நஷ்டமடைந்துவிடும். இந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவருவதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஷாகிப் கான், இயக்குநர் புல்புல் பிஸ்வாஸ், தயாரிப்பாளர் அஷ்ஃபாக் அஹமது மீது வழக்கு தொடுத்துவிட்டேன். என் அனுமதியின்றி மொபைல் எண்ணைப் பயன்படுத்தியதற்கும் என் வாழ்க்கையில் நான் அனுபவித்துவரும் துன்பங்களுக்கும் நஷ்ட ஈடாக 39 லட்சம் ரூபாய் கோரியிருக்கிறேன்” என்கிறார் மியா.

இவரது வழக்கறிஞர் எம்.ஏ.மஜித், “தனிப்பட்ட ஒருவருடைய மொபைல் எண்ணை அவரது அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்கு நிச்சயம் தண்டனை உண்டு. மியாவுக்குத் தகுந்த நஷ்ட ஈடும் கிடைக்கும்” என்கிறார். இதுவரை ஷாகிப் கான் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடுத்த மாதம் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

அடப்பாவமே! ஒருவரின் வாழ்க்கையில் இப்படி விளையாடலாமா!

Facebook Comments