உணவுசமைத்து, துணி துவைக்கும் கணவரை இரண்டே வாரத்தில் விவாகரத்து செய்த மனைவி

எகிப்தைச் சேர்ந்த 28 வயது சமர், திருமணம் நடந்து இரண்டே வாரங்களில் விவாகரத்து கேட்டிருக்கிறார். இவரது கணவர் 31 வயது முகம்மது துணிக்கடை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தகுதியான நபர்களை வேலைக்கு வைத்திருப்பதால், எந்த வேலைக்கும் அவர்கள் முகம்மதுவை எதிர்பார்த்திருப்பதில்லை. எல்லா வேலைகளும் அந்தந்த நேரம் முறையாக நடந்துவிடும். அதனால் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் இருப்பார்.

“என் கணவர் மற்ற ஆண்களைப்போல் இல்லை. குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே தொழிலைக் கவனிக்கச் செல்கிறார். மீதி நேரம் முழுவதும் வீட்டிலேயே இருக்கிறார். அவரே மூன்று வேளை உணவையும் சமைக்கிறார். எங்கள் இருவரின் துணிகளையும் துவைக்கிறார். இஸ்திரி போடுகிறார். பாத்திரங்களைச் சுத்தம் செய்கிறார். வீட்டைச் சுத்தம் செய்கிறார். ஒரு சிறிய வேலையைக் கூட என்னைச் செய்ய அனுமதிப்பதில்லை. அவருக்கு உதவி செய்யக்கூட விடுவதில்லை. நான் சும்மா அமர்ந்து அவர் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஒருவர் வேலை செய்ய, இன்னொருவர் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு கொடுமையானது? என்னுடைய ஆதங்கத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன். இந்த வீட்டில் நான் வாழ விரும்பினால், அவருடைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். இதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இவரை நீண்ட காலமாகத் தெரியும். இரண்டு ஆண்டுகளாக இவரைக் காதலித்துதான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் இரண்டே வாரங்களில் விவாகரத்து கேட்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் ஒரு முழு நேர இல்லத்தரசராக இருக்க விரும்புகிறார். வீட்டிலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் அவர் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கிறார். எனக்கு காபி வேண்டும் என்றால்கூட அவரிடம்தான் கேட்க வேண்டும். சிறை வாழ்க்கை வாழ்வதாக தோன்றுகிறது.

என் மாமியாரிடம் சென்று முறையிட்டேன். அவரால் நான் சொல்வதை நம்பவே முடியவில்லை. அவர் பெற்றோருடன் இருந்தபோது வீட்டு வேலைகள் எதையுமே செய்ததில்லை என்றார். என் பெற்றோருக்கோ, அவர் பெற்றோருக்கோ கணவரின் நடவடிக்கைகள் அசாதாரணமாகவோ, கொடுமையாகவோ தெரியவில்லை. எல்லோரும் இப்படி ஒரு கணவன் கிடைத்தும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையே என்று நினைக்கிறார்கள். குளிர்சாதனப் பெட்டியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், பீரோவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகள், வீட்டின் தூய்மை எல்லாவற்றையும் பார்த்து முகம்மது மீது இன்னும் மதிப்பை உயர்த்திக்கொண்டனர்.

ஆனால் எனக்கோ ஒரு விருந்தாளிபோல் இங்கே தங்கியிருப்பதாகத் தோன்றுகிறது. சுதந்திரமும் உழைப்பும் இல்லாத வீட்டில் வாழ முடியாது என்றுதான் விவாகரத்துக்குத் தயாராகிவிட்டேன். பெண்களுக்கு வரதட்சணை கொடுத்துதான் திருமணம் செய்வது இங்கே வழக்கம். நான் விவாகரத்து செய்தால் வரதட்சணையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன். விரைவில் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் தாக்கல் செய்வேன்” என்கிறார் சமர்.

Facebook Comments