இரவுக் காதலர்களுக்கு கைகொடுக்கும் பேஸ்புக்

உறக்கமில்லா இரவுகளின் தாலாட்டாக ஃபேஸ்புக் மாறிவிட்ட காலத்தில், அதன் மூலம் சம்பாதிக்காமல் இருக்குமா ஃபேஸ்புக். இனி இரவை ரசிக்கும் காதலர்கள் எங்கே செல்வதெனத் தெரியாமல் வீட்டில் அமர்ந்திருக்கத் தேவையில்லை. பயனாளர் இருக்குமிடத்துக்கு அருகே நடைபெறும் பார்ட்டி, உணவகங்கள், மதுபானக் கூடங்கள், மக்கள் ஒன்று சேரும் இடங்கள் ஆகியவற்றை ஃபேஸ்புக்கே சொல்லிவிடும்.

ஃபேஸ்புக் தனது ஃபேஸ்புக் லோக்கல் (Facebook Local) எனும் ஈவென்ட் அப்ளிகேஷனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அங்கு சோதனை வெற்றிபெற்ற பிறகே மற்ற நாடுகளுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஃபேஸ்புக்கின் தோல்வியடைந்த பல திட்டங்களில் Nearby திட்டமும் ஒன்று. ஆனால், பல கோடிகள் செலவு செய்து உருவாக்கிய திட்டத்தை தோல்வி என்று தூக்கியெறிய முடியாதல்லவா? உலக அரங்கில் அடிவாங்கிய Internet.org திட்டத்தை இந்தியாவில் Free Basics என்று கொண்டுவர முயன்றதைப் போலவே, Nearby மூலம் செய்த வேலையை இப்போது Facebook Local மூலமாகச் செய்யப்போகிறார்கள். ஆனால், இம்முறை கொஞ்சம் பயனுள்ளதாகத் தெரிகிறது.

ஃபேஸ்புக்கின் Nearby வசதியின் மிகப்பெரிய பலவீனம் நாம் எங்கு போகிறோம் என்பதை அனைவருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பது தான். இதன்மூலம் எந்த அவசர கதியில் இருக்கிறோம் எனத் தெரியாமல், உங்கள் நண்பர் அருகில்தான் இருக்கிறார் என அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு ஃபேஸ்புக் தெரிவித்துவிட, ஒருவேளை நண்பர்களின் அழைப்புக்குச் செவிசாய்க்க முடியவில்லையென்றால் அந்த நட்பையே இழக்கும் நிலை நீடித்திருந்தது. அதனால்தான் ஃபேஸ்புக்கின் Nearby வசதி தோல்வியடைந்தது. இப்படி இல்லாமல் வேறுவிதமாக இயங்குகிறது Facebook Local.

ஃபேஸ்புக் பயனாளர் இருக்கும் இடத்துக்கு சுற்றிலுமிருக்கும் இடங்களை அவற்றின் வகைப்படி பட்டியலிட்டு ஃபேஸ்புக் வைத்திருக்கும். நமக்கு எப்போது, எங்கே, என்ன தேவைப்படுகிறதோ அப்போது அங்கே அதை வேண்டுமென்றால் சுவைத்துக்கொள்ளலாம். நண்பர்களை சந்தித்துக்கொள்ளலாம்.

Facebook Comments