மனம் திறந்தார் நடிகை …..

தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றால், கை காட்டும் அடையாளத்தில் இருப்பவர், சரண்யா பொன்வண்ணன். விரைவில் வெளிவர உள்ள இட்லி திரைப்படத்தில், முதல் முறையாக, மாடர்ன் ரோலில் நடித்து உள்ளார்; சரண்யா, நமக்காக அளித்த பேட்டி:

அம்மா ரோலில் தொடர்ந்து நடிப்பது போரடிக்கவில்லையா?
சில படங்களில், அம்மா ரோல், பெயருக்குத் தான் இருக்கும்; ஆனால், நான் நடிக்கும் படங்களில், அம்மா ரோல், படம் முழுவதும் வரும். அம்மாவாக நடிப்பது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

உங்க சினிமா அனுபவம்?
சினிமாவுக்கு வந்து, 30 ஆண்டாகி விட்டது. 150 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். சினிமா மூலம், நிறைய விஷயங்கள் எனக்கு கிடைத்துள்ளன. இழந்தது ரொம்ப குறைவுதான். என்னிடம் எந்த பந்தாவும் கிடையாது. சாதாரண ஓட்டலில் சாப்பிடுவேன். சினிமா மூலம், எல்லாருக்கும் புகழ் கிடைக்கும்; ஆனால், எனக்கு, புகழுடன் மரியாதையும் சேர்ந்து கிடைத்துள்ளது.

உங்கள் கணவர் பொன்வண்ணன் பற்றி…?
நாங்கள் இருவரும் காதலித்தது இல்லை. அவர், என்னை திருமணம் செய்வார் என, எப்போதுமே நினைத்து பார்த்தது இல்லை. கருத்தம்மா, பசும்பொன் ஆகிய இரண்டு படங்களில் தான், இருவரும் சேர்ந்து நடித்தோம். படப்பிடிப்பில் கூட, எங்களுக்குள் காதல் இருந்தது இல்லை.பசும்பொன் படம் முடிந்த பின், அவரது அப்பா, அம்மாவை, என் வீட்டுக்கு அனுப்பி வைத்து, பெண் கேட்டார். நான், கிறிஸ்தவ மதம்; அவர், ஹிந்து மதம். எங்கள் திருமணத்தை, பெற்றோர் தான் நடத்தி வைத்தனர்.

நாயகன் படத்தை இப்போது நினைத்து பார்ப்பதுண்டா?
எனக்கு, அப்போது, 18 வயது. சென்னை, கிறிஸ்தவ கல்லுாரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான, மவுனராகம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. கமல் ஜோடி, மணிரத்னம் இயக்கம் என, முதல் படமே, எனக்கு சூப்பராக அமைந்தது. கல்லுாரியில் என்னை எல்லாரும் ஆச்சர்யமாக பார்த்தனர். காலையில், கல்லுாரிக்கு சென்று விட்டு, மதியம், அந்திமழை மேகம் பாடல் காட்சியில் நடிப்பேன்; அந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

படத்தில் நடிப்பதற்கு நிபந்தனை விதிப்பது உண்டா?
எனக்கு நீண்ட துார பயணம் பிடிக்காது. கணவரையும், குழந்தைகளையும் பிரிந்து, நீண்ட நாள் இருக்க முடியாது. ஆனால், வெளியூர் படப்பிடிப்பு என்றால், பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். அடித்து பிடித்து படப்பிடிப்புக்கு போவதெல்லாம் எனக்கு பிடிக்காது. இதனால், பல வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்.

சரண்யாவை அம்மாவாக அடையாளம் காட்டிய படங்கள் பற்றி?
மீண்டும் நடிக்க வரும் போது நான் நடிக்கும் ரோல் என்னை பேச வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ராம், தவமாய் தவமிருந்து எம்மகன், களவாணி, தேசிய விருது வாங்கி தந்த தென்மேற்கு பருவக்காற்று படங்கள் என் நடிப்பை பெருகேற்றியது. இப்படியொரு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது அதன் இயக்குநர்கள் தான்.

Saranya Ponvannan in Charulatha Movie Latest Stills

பேஷன் டெக்னாலஜி மீது ஆர்வம் எப்படி வந்தது? அதுபற்றி வகுப்பு எடுக்குறீங்களாமே?
ஆமாம்; கல்லுாரியில் படிக்கும்போதே எனக்கு அதில் ஆர்வம் உண்டு; இப்போது, முறைப்படி அதுபற்றிய விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுத் தருவதுடன், சான்றிதழும் தருகிறேன். ஒரு ஆண்டுக்கு, 200 பேருக்கு கற்றுத் தருகிறேன்.

உங்களுக்கு அரசியல் ஆர்வம் உண்டா?
அரசியலில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை; அதுபற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. டிவியில் செய்தி பார்த்தாலே, தலை வலிக்கும். உலகத்தில் என்ன நடக்கிறது என்றே, சில நேரங்களில் தெரிவது இல்லை. மற்றவர்கள் சொல்ல கேட்கும்போது, எனக்கு அவமானமாக இருக்கும். இப்போது சொல்லுங்கள்; அரசியலுக்கு நான் சரியாக வருவேனா?

நடிகைகளுடன் நட்பு பற்றி?
சொன்னால் நம்ப மாட்டீர்கள், என் போனில் எந்த ஹீரோயின் நம்பரும் கிடையாது, யாரிடமும் மணிகணக்கில் பேசியது கிடையாது. ஏதாவது முக்கியமாக பேச வேண்டும் என்றால் என் கணவரிடம் சொல்லி நம்பர் வாங்கி பேசுவேன், அவ்வளவு தான்.

உங்க பொண்ணுங்க சினிமாவில் நடிப்பார்களா?
பெரிய பொண்ணு பிரியதர்ஷினி மூன்றாவது வருடம் டாக்டர் படிக்கிறார். சின்ன பொண்ணு சாந்தினி முதலாம் ஆண்டு டாக்டர் படிக்கிறார். அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை, அவர்கள் வேறு ஒரு பயணத்தில் இருக்கிறார்கள், சினிமாவும் நல்ல துறை தான். இருந்தாலும் என் பசங்க நல்லபடியாக படித்து கொஞ்சம் சம்பாதித்து விட்டு, ரெண்டு மூன்று வருடத்தில் திருமணம் செய்து கொடுப்பது தான் என் ஆசை. அவர்கள் ஒரு நெடும் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அது ஒரு நல்லதுக்காக இருக்கட்டுமே.

விளம்பரங்களில் நடிப்பது, புகழுக்காகவா இல்லை வருமானத்துக்கா?
எனக்கு மூடி மறைத்து எல்லாம் பதில் சொல்லத் தெரியாது. விளம்பரங்களில் நடிப்பது சம்பாத்தியத்துக்கு தான். என் குழந்தைகளை படிக்க வைக்கவும், அவர்களை வளர்த்து ஆளாக்கவும் பணம் தேவை. அதனால் தான், நடிக்கிறேன். மற்றபடி, புகழுக்காக நடிப்பதாக சொல்வதெல்லாம பொய்.

பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை?
இப்போது உள்ள பெண்கள் மிகவும் ஸ்மார்ட்டாக உள்ளார்கள். நிறைய படிக்கணும், சம்பாதிக்கணும் என்று ஆசை உள்ளது. ஆணுக்கு சமமாக இருக்கணும் என்று நினைக்கிறார்கள். அது நல்ல விஷயம் தான், அதேசமயம், அவர்கள் தங்களது குடும்பம், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்து கொள்ள வேண்டும். மாமனார், மாமியாரை மதிக்கணும், அவர்கள் நம்மளை தவறாக எண்ணிவிடாத படி நடந்து கொள்ள வேண்டும். அது கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்து வாழணும். இந்த விஷயத்தில் நான் சாதித்து விட்டேன். என் மாமனார், மாமியாரை ரொம்ப பிடிக்கும். நல்ல மருமகள் என்று பெயர் எடுத்துவிட்டேன். இப்போது உள்ள பெண்கள் எல்லோரையும் அனுசரித்து போவது குறைந்துவிட்டது.

Facebook Comments