தற்கொலைகளை தடுக்க புதிய அப்ளிகேஷன்: பேஸ்புக்கின் புதிய அதிரடி

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் ஃபேஸ்புக், பயனர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுப்பதற்கு புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் அப்ளிகேஷன் முதலில் சிறிதளவு பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வெளியாகியது. ஆனால், அதன் பின்னர் உலகின் பல்வேறு இடங்களிலும் உள்ள பயனர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் அளவுக்கு வசதிகளைப் பெற்றது. அவ்வப்போது புதிய வசதிகளை வெளியிட்டு பயனர்களை ஈர்த்துவரும் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 27) ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அதிகாரபூர்வத் தகவலில் பயனர்கள் தற்கொலை செய்வதைத் தடுப்பதற்கு புதிய செயற்கை நுண்ணறிவுகொண்ட சாஃப்ட்வேர் ஃபேஸ்புக் அப்ளிகேஷனில் இணைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி அனைத்து பயனர்களின் பதிவுகளும், வீடியோ பதிவுகளும், கமென்ட்களும் இந்த செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர் மூலம் கண்காணிக்கப்படும். அதில் பயனர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்த தகவல்களை பதிவிட்டாலோ, வீடியோக்களை பதிவிட்டாலோ அந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கண்டறிந்து பயனரின் நண்பர்களிடமும், ஃபேஸ்புக் நிறுவனத்திடமும் அந்த தகவலைப் பகிர்கிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஒரு பயனர் தற்கொலை செய்ததை ஃபேஸ்புக்கில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அதுபோன்ற வீடியோக்கள் பதிவிடும் பட்சத்தில் அதை நீக்கம் செய்யவும் இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

ஒரு பயனர் தற்கொலை குறித்த பதிவுகளைப் பதிவிடும்போது இந்தச் செயற்கை நுண்ணறிவு அவரிடம் “Are you ok?” மற்றும் “Can I help?” போன்ற கேள்விகளை எழுப்புகிறது. இந்தத் தொழில்நுட்பம் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Total Page Visits: 53 - Today Page Visits: 1