இரு போராளிகளும் பத்து மாடுகளும்

மாட்டுப் பண்ணைகள் – மாடுகளுடன் ஒரு வாழ்வு வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கான ஒரு தீர்வு.

“என பெரியம்மா நல்லா சாப்பிட்டியே…

சின்ன வெள்ளை என்னக் கொஞ்சனை…..

டான்ஸ் அம்மாவுக்கு என்ன வேணும்..

கருப்பி ஏன்டி சாப்பிடாமல் ஒழிச்சு வைக்கிறா

என்ட கண்ணுக்குட்டி ஓடியான இஞ்ச….

இஞ்ச பாரண இத….”

இப்படி வாஞ்சையாக உரையாடியது மனிதர்களுடனல்ல…. மாடுகளுடன்…

உரையாடியவர் நேசன் வசந்தி. முன்னால் தோழர், முன்னால் போராளி, இன்னால் சமூகப் போராளி, வாழ்வதற்காக போராடுகின்றவர்கள், நமது நண்பர். ஆனால் 1989ம் ஆண்டின் பின்பு இப்பொழுதுதான் சந்தித்தோம்.

நேசனும் அவரது துணைவியார் வசந்தியும் போரின் இறுதிவரை பயணித்து, போரிட்டு, உயிருடன் போராடி, கைதாகிப் புனர்வாழ்வு பெற்று மீண்டவர்கள். முன்னால் போராளிகளான இருவரும் வாழ்க்கையில் மட்டுமல்ல உழைப்பிலும் இணைந்து செயற்படுகின்றனர். இப்பொழுது தமது முயற்சியால் புதிய வாழ்வு வாழ்கின்றனர். பத்து மாடுகளுடன் செல்வபாக்கியம் பண்ணை என்ற சிறிய மாட்டுப் பண்ணையை இருவரும் சேர்ந்து நடாத்துகின்றார்கள். நேசன் வசந்தி சிறந்த மாட்டுப் பண்ணை நிர்வாகியாக இருக்கின்றமை மட்டுமல்ல பலரை அத்துறையில் பயிற்றுவிப்பவராகவும் செயற்படுகின்றார். இவரது கடந்த காலத்தையும் இன்றைய வாழ்க்கையையும் அறிந்து கொள்ளும் ஆவலுடன் அவருடன் உரையாடினேன். இத் தகவல்கள் அனுபவங்கள் வேலையின்றி இருக்கும் முன்னால் போராளிகளுக்கு மட்டுமல்ல வேலையில்லாப் பட்டதாரிகளுக்கும் நம்பிக்கையளிப்பதாக இருக்கும் என நம்புகின்றேன். ஏனெனில் முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் உழைப்புக்கும் உதாரணமாக இவர்கள் இருவரும் விளங்குகின்றார்கள் என்றால் மிகையல்ல. இனி நேசனின் வசந்தி ஆகியோரின் பார்வையில்…

நான் உயர்தரம் படித்த காலத்தில் 1983 கலவரம் ஏற்பட்டது. அப்பொழுது சோமேஸ் என்பவரின் தொடர்பு கிடைக்க ஈரோசின் மாணவர் அமைப்பான கைசுடன் இணைந்து அகதிகளுக்குப் பங்களித்தோம். பின்பு கல்வித்திணைக்களத்தில் ஊழியராகப் பணிபுரியும் வாய்ப்பு ஏற்பட்டதுடன் பத்திரிகைகளுக்குப் பகுதி நேர இரகசிய செய்தி வழங்குபவராகவும் இருந்தேன். அதில் பணியாற்றிக் கொண்டே ஈரோஸ் தோழர்களுடன் தொடர்பில் இருந்தேன். 1988ம் ஆண்டு இந்திய இராணுவம் கிரிஸ்தவ பெண் மதகுருக்களை சித்திரவதை செய்த படங்களை எடுத்து ஊரியவர்களிடம் கொடுக்க அது பிரபல்யமானது. இது இந்திய இராணுவ அதிகாரிகளுக்குப் பிரச்சனையை உருவாக்கியது. ஒரு பக்கம் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு மறுபக்கம் எம்மைத் தேடினார்கள். நாம் தான் வழங்கினோம் என்பதை அறிந்து எம்மைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பின் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியபோதே எம்மை விடுதலை செய்தனர்.

1990ம் ஆண்டு மீண்டும் வேலையில் இணைந்தேன். ஆனால் 1995 ஆண்டு இடப்பெயர்வின்போது வன்னிக்குச் சென்றோம். 1998 ம் ஆண்டிலிருந்து இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டேன். 2002ம் ஆண்டு எனது சகோதரி ஏற்கனவே இயக்கத்தில் போராளியாக இருந்த வசந்தியை எனக்குத் திருமணம் செய்து வைத்தார். சில காலங்களின் பின்பு சகோதரி புற்று நோய் வந்து இறந்துவிட்டார்.

போரின் இறுதி நாட்களில் நான் படுகாயமடைந்தேன். என்னால் அசைய முடியவில்லை. எனது நண்பர் என்னைத் தூக்கி சுமந்து கொண்டு பல தூரம் நடந்து சென்று வைத்தியசாலையில் ஒப்படைத்துக் காப்பாற்றினார். என்னை வைத்தியம் செய்த வைத்தியர்கள் நான் நீண்ட நாட்கள் வாழ மாட்டேன் என கூறினார்கள். இராணுவத்தினரிடம் சரணடைந்த பின் சிறிது காலத்தில் புனர்வாழ்வு அளித்தார்கள். எனது துணைவியாரும் சரணடைந்து புனர்வாழ்வு முகாமில் இருந்தார். நான் கடுமையாக காயப்பட்டு இருந்தபோதும் அறுவை சிகிச்சை வைத்தியர் ஆதவன் தான் என்னை மீண்டும் மனிசன் ஆக்கினவர்.

மூன்று வருடங்கள் இருவரும் புனர்வாழ்வு முகாமில் இருந்தபின் மீண்டும் நாம் சொந்த ஊருக்குத் திரும்பினோம். வீடு அத்திவாரம் மட்டுமே இருந்தது. அதற்கு மேல் சிறு கொட்டிலைப் போட்டுவிட்டு சும்மா இருந்த காணியில் தோட்டம் செய்து வாழ்க்கையை கொண்டுபோனோம். அப்பொழுது புலம் பெயர்ந்து வாழும் நண்பர் துரைசிங்கம் மோகன் அவர்களின் அறிவுரையைக் கேட்டு வாழைத் தோட்டம் வைத்தோம். அதன்பின் அவர் 35 ஆயிரம் ரூபா தந்து மாடு வாங்கச் சொன்னார். “மாடு வளவாட நீ வாழலாம்” என்றார். அவர் கதையைக் கேட்டு நாம் மாடு வாங்கி வளர்த்தோம். அதன் பின் அவரின் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. “மாடுகள் வளர்த்து நாம் வாழும்” இன்றைய நிலையை அவருக்குச் சொல்ல முடியவில்லை. அவர் அறிந்தால் பெரும் மகிழ்ச்சி அடைவார்.

ஆறு மாதம் மாடு தேடினோம். ஆனால் மாடு கிடைக்கவில்லை. மாட்டுக்கு என ஏற்கனவே விதைத்த புல்லுக் கட்டையை கோழி சாப்பிட்டது. சந்தையில் போய் மரக்கறி வாற பாக்கை பொறுக்கி ஒவ்வொரு புல்லு கட்டையையும் கோழி கொத்தாதவாறு பாக்கால் முடினோம். முதலாவதாக நட்ட புல்லுகள் அழிந்தன. சில மாதங்களின் பின்பு ஒருவரிடம் இரண்டு மூன்று மாடுகள் இருந்ததை அறிந்து சென்றோம். ஒரு மாட்டின் விலையை 50 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரமாகக் குறைத்தார். அதற்கு மேல் குறைக்க மாட்டன் என்றார். துணைவியாருடன் கதைத்தபோது அவர் வாங்கும்படி சொன்னார். விஸ்வமடுவிலிருந்து புதுக்குடியிருப்பிற்கு மாடு கொண்டுவர அனுமதி பெற வேண்டும். ஒரு பிரதேசத்திலிருந்து இன்னுமொரு பிரதேசத்திற்கு மாடுகளை அனுமதியில்லாமல் கொண்டுவர முடியாது. ஆகவே அனுமதியைப் பெற்றுக் கொண்டு பெரியம்மாவையும் அதன் மகளான டான்சையும் (நடனம்) அழைத்துவந்தோம். இந்தப் பெயர்கள் அழைத்துவந்த பின் நாம் வைத்தவை.

பெரியம்மா ஆறு லீட்டர் பால் எடுக்கும் என்றார்கள். ஆனால் 2 லீட்டர் தான் எடுத்தோம். ஆகவே விற்றுவிடுவோம் என யோசித்தோம். ஆனால் மாமா அது முதல் வந்த மாடு் நிற்கட்டும் என்றார். மாட்டுக் கொட்டில் இ்ல்லை. புல்லையும் வேலியில் இருக்கிற சீமைக் கிலுவையையும் நம்பி தான் வளர்த்தோம். புல்லுக்குத் தண்ணி ஊற்றி வளர்க்க எம்மை நக்கலாகப் பார்த்து சிரித்தார்கள். ஆனால் பின்பு அவர்களே என்னிடம் புல்லுக் கட்டைகள் வாங்கியதும் உண்டு. இன்று பெரியம்மா ஒரு நாளைக்குப் பத்து லீட்டர் பால் கறக்குறார்.

மாடு வளர்ப்பை பற்றி அறிவதற்காக வவுனியாவில் பண்ணை வைத்திருக்கும் ஒரு நண்பரிடம் போனேன். ஆனால் அவர் மாடுகளையும் தனது பண்ணையையும் காண்பிக்க மாட்டேன் என்றார். “அது… மாடு காட்டக்கூடாதுடப்பா… 8 லீட்டர் பால் தார மாடு கண்ணூரு பட்டும்” என்றார். ஏமாற்றத்துடன் திரும்பியபோதும் சோர்ந்து போய்விடவில்லை. அன்று எதிர்காலத்தில் எனது மாடுகளை மற்றவர்களுக்கு காட்டி அவர்களைப் பயிற்றுவிப்பது என முடிவெடுத்தேன். முதலில் எனக்குத் தெரிந்த மாதிரி இரண்டு மாடுகளையும் வளர்த்தேன். கால்நடை வைத்தியர் தயாபாரன் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவரின் ஆலோசனைகள் கேட்டுப் பல முயற்சிகள் செய்தேன். அதில் இடம் பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற விஸ்வமடுவில் உள்ளவர்களுக்கு மாடுகள் கொடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு மாடு வளர்க்கத் தெரியவில்லை. அவர்களுக்கும் பயிற்சி அளிக்கும்படி வைத்தியர் கூறினார். இதன்பின் பலர் எங்களுடைய பண்ணயைப் பார்க்க விரும்பி வந்தார்கள். இவையே நான் பயிற்சிகள் வழங்கும் அளவிற்கு என்னை வளர்த்தது. அப்பொழுது எங்களிடம் 4 மாடுகள் மட்டுமே இருந்தன.

ஒரு முறை பெரியம்மாவில் பால் குறைந்து கொண்டு போக இன்னுமொரு மாடு வாங்க அறிவகன் என்பவர் உதவினார். அவரிடம் புல்லு வளரவில்லை என்று யாழ்ப்பாணத்தில் இருந்து மாட்டைக் கொண்டுவந்து என்னிடம் தந்தார். காலையில் கறக்கும் பாலை நான் எடுத்துக் கொண்டு பின்னேறப் பாலை அவருக்கு கொடுத்தேன். இதுதான் எங்களுக்கு இடையிலான உடன்பாடு. பிறகு அவர் அந்த மாட்டை விற்க வெளிக்கிட நானே வாங்கினேன். அதுதான் வெள்ளையம்மா. அது நோயுடன் தான் என்னிடம் வந்தது. அதற்குப் பொருத்தமான அளவில் தீவணம் வைத்து இன்று ஒரு நாளைக்கு 15 லீட்டர் பால் தரும் மாடாக வளர்த்துள்ளேன். வெள்ளையம்மாவில் மூன்று நேரம் பால் எடுத்தோம். இப்பொழுது என்னிடம் பெரியம்மா, நடனம் அல்லது டான்ஸ், வெள்ளையம்மா, செல்வி, பொன்னி, சின்ன வெள்ளை, திருமகள், காராம்பசு, காமதேனு, பொட்டுக்காரி எனப் பத்து மாடுகளும் துளசி, நந்தா, அபிராமி, எழினி நான்கு கன்றுக் குட்டிகளும் இருக்கின்றன.

அமெரிக்க மக்கள் எயிட் தொடர்பும் அதனுடாகப் பயிற்சிகளும் பங்களிப்புகளும் கிடைத்தன. இலங்கையில் உள்ள பல பண்ணைகளைப் போய்ப் பார்த்தேன். சிஐசி பண்ணை, திண்ணவேலிப் பண்ணை, என்எல்சி மற்றும் இலங்கையின் அரசாங்கப் பண்ணைகள் பலவற்றை நேரில் சென்று பார்வையிட்டேன். மேலும் தெரிஞ்ச பண்ணையாளர்களைக் கேட்பேன். வெளிநாட்டில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் அங்கு மாடு வளர்ப்பு பற்றிக் கேட்பேன். இதுதான் எனது எதிர்காலம் என்பதை தெரிந்து கொண்டேன். இவையெல்லாம் எனது ஆற்றலையும் அறிவையும் வளர்க்கப் பல வழிகளில் பங்களித்தன. ஊக்குவித்தன. நாமும் வளர்ந்தேன். நமது பண்ணையும் வளர்ந்தது. இப் பண்ணைகளுக்கு இரண்டாம் தரம் போனபோது அவர்களுக்கு நான் பயிற்சி கொடுக்குமளவிற்கு வளர்ந்திருந்தேன். என்னிடம் கேட்டும் புதியவர்களுக்கும் பயிற்சி கொடுத்தார்கள். நான் எனது பண்ணையில் செய்த பல முயற்சிகள் வேலைகள் அங்கு செய்யாமல் இருந்தன. அவற்றைக் சுட்டிக் காட்டியபோது வரவேற்பைப் பெற்றன. இப்பொழுது நான் ஒரு மாட்டு பண்ணை பயிற்சியாளராகவும் வளர்ந்து வருகின்றோம். மேலும் எனது பண்ணை ஒரு மாதிரி வடிவமாகவும் பார்க்கப்படுகின்றது.

2014ம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்த இப் பாற் பண்ணையில் 2015ம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒன்றரை லீட்டர் பால் மட்டுமே ஒரு நாளைக்கு வழங்கினோம். 2016ம் ஆண்டு 12 லீட்டர் பாலை வழங்கினோம். 2017ம் ஆண்டு காலையில் சுமார் 30 லீட்டர் பாலையும் மாலையில் 20 லீட்டர் பாலையும் வழங்கினோம். ஆரம்பத்தில் காலையில் கறக்கும் பாலை மட்டுமே மில்கோ பால் கம்பனிக்கு வழங்கினோம். மாலையில் வழங்கவில்லை. எம்மிடம் அதிகமான பால் கறக்க ஆரம்பிக்க மாலையிலும் பால் வழங்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் மாலையில் மூன்றரை லீட்டர் பாலை மட்டுமே எங்களிடமிருந்து பெறுவதற்காக வந்தார்கள். இப்பொழுது புதுக்குடியிருப்பிலிருந்து விஸ்வமடுவரை 500 லீட்டர் பாலை மாலையிலும் பெறுகின்றார்கள். இது இப் பிரதேசத்தில் பால் உற்பதியில் ஏற்பட்ட மிகப் பெரிய முன்னேற்றம். அதற்கான தூண்டு கோலாக நாம் இருந்தோம் என்பது மகிழ்ச்சியே.

முதன் முதலாக 2015ம் ஆண்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரண்டாவது சிறந்த பண்ணையாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். இதன்பின் 2016 ம் ஆண்டு முல்லைத்தீவு மாட்டத்தில் இரண்டாவது பண்ணையாளராக மாகாண சபையால் தெரிவு செய்யப்பட்டேன். இப் பரிசினை எனது துணைவியார் சென்று வாங்கினார். ஏனெனில் இந்த முன்னேற்றகளில் அவருக்கும் சரிசமனான பங்கு உள்ளது. அதை அங்கீகரிக்க வேண்டும். அதேநேரம் இரண்டாவது இடத்தில் ஏன் வந்தேன் என்பதற்கான காரணங்களை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்தேன். இதன் பலனாக அடுத்த சில மாதங்களில் மத்திய அரசாங்கத்தின் தெரிவில் மாவட்டத்தில் முதலாவது பண்ணையாளராகத் தெரிவு செய்யப்பட்டேன். இரண்டு மாதங்களில் ஏற்படுத்திய மாற்றங்களும் வளர்ச்சியும் இந்த முன்னேற்றத்தையும் அங்கிகாரத்தையும் தந்தது எனலாம்.

ஒவ்வொரு மாடுகளைப் பற்றியும் நன்றாக அறிய வேண்டும். அதன் நிறை, இனம், குணம் எனப்பலவற்றை அறியவேண்டும். இவற்றைக் கவனத்தில் கொண்டு சரியான அளவில் உணவையும் நீரையும் கொடுத்தால் மாடுகள் நன்றாகப் பால் தரும். மாடு வளர்ப்பது என்பது ஒரு கலை. ஒரு மாட்டைக் காட்டி, “அந்த மாட்டைப் பாருங்கள்… அது சாப்பாடு வைக்கும் பொழுது கொஞ்சப் புல்லுகளை எடுத்து பக்கத்திலுள்ள மற்ற மாடு சாப்பிடாதவாறு எதிர்ப் பக்கம் வைத்துவிடும். பிறகு தனக்குப் பசிக்கிற நேரம் தான் மட்டும் சாப்பிடும்.” இப்படி மாடுகளுக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ளன. ஆகவே மாடுகளுக்கு எப்படி சாப்பாடுகள் வைப்பது என்பது முக்கியமானதும் பொறுப்பானதுமான வேலை.

சைலேஜ் என்பது புற்களை எடுத்து பாதுகாப்பான முறையில தரமுயர்த்தி மாட்டுக்கு உணவாகப் பயன்படுத்துவதாகும். ஆரம்பத்தில் கையினால் புற்களை வெட்டி சைலெஜ் செய்தேன். ஆறு மணியில் இருந்து இரவு 11 மணிவரை வெட்டினேன். நீண்ட நேரங்கள் வேலை செய்தேன். அதன்பின்பே யுஎஸ் எயிட்டின் பங்களிப்புடன் இயந்திரம் வாங்கி புற்களை வெட்ட ஆரம்பித்தேன். சைலேஜை செய்வதற்கு புல்லு, யூரியா, சீனி, உ்ப்பு என்பவற்றை சரியான அளவில் சேர்த்து அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி உருவாக்க வேண்டும்..

ஒரு மாட்டுக்கு எவ்வாறு உணவு வைக்கின்றோம் என்பது முக்கியமானது. 400 கிலோ மாட்டுக்கு அதன் பத்து வீதம் அதாவது 40 கிலோ உணவு புல்லு வைக்க வேண்டும். ஆனால் சைலேஜ் 20 கிலோ அதாவது 5 விதம் வைத்தால் போதுமானது. அடர் தீவனம் வைக்கத் தேவையில்லை. மேலும் இவ்வாற செய்தால் ஒரு நாளைக்குப் பயன்படுத்தும் பச்சைப் புல்லை இரண்டு நாளைக்கு உணவாகப் பயன்படுத்தலாம். இவ்வாறு செலவைக் குறைத்து பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன் மாட்டையும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம். இது தொடர்பாக முன்னாள் கால் நடைப் பணிப்பாளர் வைத்தியர் சிவலோகநாதன் பல அறிவுரைகளைத் தந்தார்.

ஒரு நாள் வசந்தம் தொலைக்காட்சியில் மாட்டுப் பண்ணை துறைசார் வல்லுனர்கள் அசோலா பாசி தொடர்பான விளக்கம் கொடுத்தனர். அதன்பின் அசோலா பாசியை தேடினோம். முல்லைத் தீவு கால்நடை அலுவலகத்தில் வைத்தியர் நிவேதியிடம் அதனைப் பெற்றோம். அதன் பின் நாம் அதனை உருவாக்கினோம். 2 கிலோ அசோலா பாசியை மாட்டுக்கு சாப்பிட வைத்தால் அடர்தீவணத்தை (மாஸ் – தவிடு புண்ணாக்கு) தவிர்ப்பதுடன் அதற்கான செலவு செய்யும் 250-350 ரூபா பணத்தையும் மீதம் பிடிக்கலாம். ஒரு கிலோ அசோலா பாசியை வளர்க்க ஒரு ரூபாய் தான் செலவாகும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜேசி, சிஜிவால் போன்ற கலப்பு மாடுகளை வளர்க்கலாம். நாம்பனை தேடி சினை பிடிக்கச் செய்யலாம். ஆனால் அவை நோய்களை காவக்கூடிய சாத்தியம் உள்ளது. இதற்கு மாறாக செயற்கைமுறை சினையில் இவ்வாறான நோய்களைத் தவிர்க்கலாம். ஆகவே செயற்கை முறை சினைப்படுத்தல் சிறந்தது. மேலும் அதிக வெய்யில் மாட்டுக்கு ஆரோக்கிமானதல்ல. இதனால் பால் உற்பத்தி குறைவாக இருக்கும். ஆகவே மாடு வளர்ப்பிற்கு குளிர்மையான பிரதேசங்களே ஊகந்தது என்கின்றார்கள். இப் பிரச்சனையைத் தீர்க்க பண்ணையைச் சுற்றி குளிர்மையாக வைத்திருப்பது அவசியமானது. இவ்வாறான சூழல் அதிகளவு பாலைத் தரும்.

மாட்டுப் பண்ணை, கால் நடைப் பண்ணை, கால் நடை அபிவிருத்தி திணைக்களம், மற்றும் கால் நடை வைத்தியரின் அனுசரனைகள் இல்லாமல் மாடு வளர்ப்பைச் சரியாகச் செய்ய முடியாது. அவர்களின் ஆலோசனைகளைப் பங்களிப்புகளைப் பெற்றே ஆகவேண்டும்.. மேலும் இவர்கள் நிதிப் பங்களிப்புகளும் செய்வார்கள். அவ்வாறு உயிர் வாயு உற்பத்திற்கு 50 ஆயிரம் ரூபா பங்களித்தார்கள். ஆனால் அதை அமைப்பதற்கு ஒரு இலட்சம் ரூபா தேவைப்பட்டது. மிகுதிப் பணத்தை நாம் போட்டு அதனை செய்து முடித்தோம். மாட்டு சானத்திலிருந்து உயிர்வாயு தயாரிக்கலாம். இதன் மூலமாக வீட்டுத் தேவைகளான காஸ் அடுப்பு, நீர் இரைக்கும் இயந்திரம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்துகின்றோம். மேலும் மின்உற்பத்தி இயந்திரத்தையும் இயங்கச் செய்ய முயற்சிகள் எடுக்கின்றேன். இதனுடாக மாட்டுப் பண்ணைக்கும் வீட்டுக்கும் தேவையான மின்சாரத்தைப் பயன்படுத்த எண்ணியுள்ளோம்.

நம் இருவரினதும் இந்த முயற்சியில் பலர் பங்காற்றியுள்ளார்கள். அதில் சிலரை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கின்றேன். மேலும் முக்கியமான சிலரைக் கூறவேண்டும். கால் நடை வைத்தியர் தயாபரன், யுஎஸ் எயிட்ஸ வைத்தியர் சிவலோகநாதன். மிருக ஆய்வு நிறுவனத்தில் பிரேம் லால் அனில். யுஸ்எயி்ட் நிர்வாகத்தில் மிதுலன் மற்றும் முல்லை மாவட்ட கால் நடைப் பிரதிப் பணிப்பாளர் கிரிஜகலா சிவானந்தன், கிளிநொச்சி கால்நடை உதவி பணிப்பாளர் கௌரி திலகன் மற்றும் வைத்திய கலாநிதி வசிகரன் ஆகியோர் பங்களித்தவர்களில் முக்கியமானவர்கள்.

தொடர்புக்கு: 0770610698

மீராபாரதி-
நன்றி: தினக்குரல் 06.08.2017

Facebook Comments