செம்மறி ஆடுகளுக்கு இவ்வளவு சக்தியா? (Video)

Advertisement

பிரபலமான மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனை செம்மறி ஆடு வெளிப்படுத்தியது என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செம்மறி ஆடுகளுக்கு, திரைப்பட நடிகர் ஜேக் ஜில்லன்ஹாவ்ல், எம்மா வாட்ஸன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் பிபிசி செய்தி வாசிப்பாளர் ஃபியோனா ப்ரூஸ் ஆகியோரது முகங்களை அடையாளம் கண்டுகொள்ள பயிற்சி கொடுத்தனர்.

பயிற்சிக்கு பிறகு, செம்மறி ஆடு பிரபலமற்றவர்களின் முகங்களைவிட பிரபலமானவர்களின் முகங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது.

முந்தைய ஆய்வுகள், செம்மறி ஆடுகளால் சக செம்மறி ஆடுகளையும், அதற்கு முன்பே தெரிந்த மனிதர்களையும் அடையாளம் காண முடியும் என்பதை உணர்த்தி இருந்தன.

நாங்கள் இந்த ஆய்வில் என்ன செய்தோம் என்றால், செம்மறி ஆடுகளால் புகைப்படங்களை பார்த்தே மனிதர்களை அடையாளம் காண முடியுமா என்று ஆராய்ந்தோம் என்கிறார் இந்த ஆய்வின் தலைவர் பேராசிரியர் ஜென்னி மார்டன்.

இரண்டு பரிமாண புகைப்படங்களை, செம்மறி ஆடுகளால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா என்பதில் கவனம் செலுத்தினோம்.

வெல்ஷ் மலைப்பகுதியைச் சேர்ந்த எட்டு செம்மறி ஆடுகளுக்கு இந்த பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதன் முன் எட்டு புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதில் நான்கு பிரபலமான மனிதர்களுடையது. நான்கு புகைப்படங்கள் சாதாரண மனிதர்களுடையது. செம்மறி ஆடுகளுக்கு, பிரபலமான மனிதர்களை அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு பரிசாக உணவு உருண்டைகள் வழங்கப்பட்டன.

செம்மறி ஆடுகளுக்கு வெவ்வேறு புகைப்படங்கள் இரண்டு கணிணி திரையில் காட்டப்பட்டன. அந்த ஆடுகள் தனது மூக்கால் அகச்சிவப்பு கற்றை உடைத்து படங்களை தேர்வு செய்தன.

ஆடுகளால் பிரபலமானவர்களைன் படங்களை அடையாளம் கண்டுக் கொள்ள முடிந்ததும், அவற்றுக்கு புதிய பணியை ஆய்வாளர்கள் அளித்தார்கள். அதே பிரபலமான மனிதர்களின் புகைப்படங்கள், வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்டு இருந்தால், இந்த ஆடுகளால் அடையாளம் காண முடிகிறதா என்று அவர்கள் தெரிந்துக் கொள்ள விரும்பினர்.

மீண்டும், அந்த ஆடுகளுக்கு வேறொரு கோணத்தில் எடுக்கப்பட்ட அதே புகைப்படங்களை அடையாளம் கண்டுக் கொள்ளும் பணி வழங்கப்பட்டது.

இறுதியாக, அந்த ஆடுகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களின் முகங்களை புகைப்படங்கள் மூலமாக ஆடுகளால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா என்று சோதிக்கப்பட்டது.

வரிசையாக ஒட்டப்பட்ட அந்நியர்களின் முகங்களுக்கு இடையே, அந்த பயிற்சியாளர்களின் புகைப்படங்களும் ஒட்டப்பட்டன.

இந்த தேர்விலும் ஆடுகள் வெற்றிபெற்றன. ஆம், அவை சரியாக தனது பயிற்சியாளர்களின் புகைப்படங்களை அடையாளம் கண்டு கொண்டன.

செம்மறி ஆடுகள் குரங்குகளை போல, மனித குரங்குகள் போல, மனிதர்கள் போல சரியாக முகங்களை அடையாளம் கண்டுக் கொள்ளவல்லவை என்று இந்த ஆய்வின் முடிவுகள் தெளிவாக கூறுகின்றன.

செம்மறி ஆடுகளால், மனிதர்களின் வெவ்வேறு முகபாவனைகளை அடையாளம் கண்டுக் கொள்ள முடிகிறதா என்று எதிர்காலத்தில் ஆய்வு செய்வது சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

இந்த ஆய்வு முடிவுகள் ராயல் சொசைட்டி ஜர்னல் ஓபன் சைன்ஸ் சஞ்சிகையில் பிரசுரமாகி உள்ளது.

Facebook Comments