ஆப்கானிஸ்தான் பெண் இராணுவ வீராங்கனைகளுக்கு சென்னையில் பயிற்சி

ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்குச் சென்னை பரங்கிமலையிலுள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகள் இந்திய ராணுவப் பயிற்சி முறைகளை மேற்கொள்வதற்காகக் கடந்த திங்கட்கிழமை இந்தியா வந்தனர். டிசம்பர் மாதம் 24ஆம் தேதி வரை பயிற்சி பெறும் இவர்களுக்கு நேற்று (டிசம்பர் 11) துப்பாக்கிச் சுடும் பயிற்சி வழங்கப்பட்டது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “எங்களுடைய நாட்டில் பெண் அதிகாரிகள் ராணுவத்தில் பணிபுரிவதற்கு அதிக வாய்ப்பளிக்கப்படுவதில்லை. இதற்காக அதிக பயிற்சியும் கொடுப்பதில்லை. ஆனால், இந்தியாவில் ராணுவத்துக்கு அதிநவீன பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளினால்தான் இந்திய ராணுவத்தினர் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தனர்.

பயிற்சிகள் குறித்து, சென்னை ராணுவப் பயிற்சி மையத்தின் கேப்டன் சம்ரிதி கூறுகையில், “ஆப்கானிஸ்தானிலிருந்து வந்துள்ள பெண் ராணுவ அதிகாரிகள் அனைவருக்கும் சிறந்த முறையில் அனைத்துவிதமான பயிற்சிகளும் வழங்கப்படும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருக்கும் 20 பெண் ராணுவ அதிகாரிகளுக்கு உடற்பயிற்சி, டிரில் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆங்கிலத்தில் பேசுவது உள்ளிட்ட பயிற்சிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் இந்திய ராணுவத்தினரின் ஆயுதங்களைக் கையாள்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அவர்கள் நாட்டில் கற்றுத்தரப்பட்ட பயிற்சிகள் பற்றி நாங்கள் தெரிந்து கொள்வதும், அவர்களுக்கு நம்முடைய ராணுவ பயிற்சிகள் குறித்துக் கற்றும் தரப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Facebook Comments