குழந்தைகளின் உற்சாகமின்மைக்கு இதுவும் ஒரு காரணம்

உடல் இயல்பாக இயங்குவதற்கு இரும்புச்சத்து மிக மிக அவசியம். ஆரோக்கியமும், பலமும் தருவது இரும்புச்சத்து. வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. இரும்புச்சத்து குறைந்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் வரும். இரும்புச்சத்து குறைவான குழந்தைகள் குடும்பம், உறவுகளை விட்டு விலகி தனிமையில் இருக்க விரும்புவார்கள்.

பசி இல்லாமல் நீண்ட நேரம் திரிவார்கள். விளையாட்டில் ஆர்வம் குறைவாக இருக்கும். எந்த விஷயத்திலும் அலட்சியமாக நடந்துகொள்வார்கள். அவர்கள் சுவாசத்தில் தடை இருக்கும். தலைவலி, தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் தெரியும்.

கண்ணின் கீழ்புறமும், உடலின் மற்ற பகுதிகளிலும் சருமம் வெளிர் நிறத்தில் காணப்பட்டால் ரத்தசோகை என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். இதற்கு இரும்புச்சத்து குறைவு காரணமாகும். அடிக்கடி காய்ச்சல் வரும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதைக் காட்டும்.

ரத்தசோகை உள்ள குழந்தைகளுக்கு நிறைய கோபம் வரும். விளையாட்டு மற்ற செயல்பாடுகளில் சோர்ந்து காணப்படுவார்கள். உணவு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் மண்ணை எடுத்து ருசிப்பார்கள். சாதாரண நேரத்தில் அரிசி, சர்க்கரையை ஆவலுடன் தின்பார்கள்.

முழுமையான சுகப்பிரசவத்தில் முழு எடையுடன் (3 கிலோ) பிறக்கும் குழந்தைக்கு உடலில் போதிய அளவு இரும்புச்சத்து இருக்கும். அந்தக் குழந்தையின் தாயாரின் தாய்ப்பாலிலும் 100 சதவீத இரும்புச்சத்து இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கும் குறைவில்லாமல் இரும்புச்சத்து கிடைக்கும்.

குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து இயல்பாகவே குறைவாக இருக்கும். அந்த குழந்தையின் தாய்க்கும் உடலில் சத்துக்குறைவு இருப்பதால் தாய்ப்பாலிலும் இரும்புச்சத்து குறைவாக இருக்கும். அவர் தாய்ப்பால் கொடுத்தாலும் குழந்தைக்கு இரும்புச்சத்து முழுதாக கிடைப்பதில்லை.

இரும்புச்சத்துக் குறைவை உணவு மூலம் பெருமளவு சரிப்படுத்திவிடலாம். அவல், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், முருங்கைக்கீரை மற்றும் கீரைகள், தவிடு, பேரீச்சம் பழம், முந்திரிப்பழம் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. பழச்சாறுகளிலும் ‘அயர்ன்’ இருக்கிறது. காபி, டீ போன்றவற்றை அதிகம் குடித்தால் இரும்புச்சத்தை உடலில் ஏற்கும் தன்மை குறையும்.

எனவே இவற்றை தவிர்த்து சூப், பழரசங்களைப் பருகத் தரலாம். குழந்தைகளுக்கு மதிய உணவுடன் நெல்லிக்காய் துவையல், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்த சாலட் செய்து தந்து சாப்பிட வைக்கலாம். கேழ்வரகு, பச்சைப் பயிறு, கடலைப்பருப்பு, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அடிக்கடி இடம்பெற செய்தால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

Total Page Visits: 53 - Today Page Visits: 1