முல்லாக்கள் என்றால் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலையை துண்டித்திருப்பார்கள்

Advertisement

தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியிருந்த நிலையில், தீசன் என்பது சிங்கள அரசரின் பெயர் என்றும், சிறிலங்காவின் மூலப் பெயர் சிங்கலே என்றும் கூறியிருக்கிறார் றியர் அட்மிரல் சரத் வீரசேகர.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரதியமைச்சராக இருந்த றியர் அட்மிரல் சரத் வீரசேகரவிடம், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விகளுக்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கேள்வி: தேவநம்பிய தீசன் உண்மையில் ஒரு தமிழ் மன்னன் என அண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அறிவித்திருந்தார். இது தொடர்பான தங்களது கருத்து என்ன?

பதில்: தேவநம்பிய தீசன் ஒரு தமிழ் மன்னன் என விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். தீசன் என்பது சிங்கள அரசரின் பெயராகும். தேவநம்பிய என்பது இந்த அரசனைக் கௌரவிக்கும் முகமாக வழங்கப்பட்ட பெயராகும்.

இந்தியாவின் லும்பினியில் காணப்படும் அசோகரின் தூணில்(Ashok Pillar) செதுக்கப்பட்டுள்ள Rummindei கல்வெட்டில், அசோகச் சக்கரவர்த்தியை கௌரவிக்கும் முகமாக வழங்கப்பட்ட தேவன பியேன பிரியதர்சன அசோக (Devena Piyena Priyadarshana Ashoka) எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் இந்தியாவிற்குச் சென்று ‘தீசன்’ கதையைக் கூறவேண்டும், இந்தியர்களிடம் போய் மௌரியப் பேரரசனான அசோகனும் தமிழ் மன்னன் என்று அவர் கூறட்டும்.

கேள்வி: இது சிங்கள பௌத்த நாடல்ல என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: இந்த நாட்டின் மூலப் பெயர் ‘சிங்கலே'( Sinhale) என்பதாகும். 1815ல் பிரித்தானியத் தலைவர்களாலும் ‘சிங்கலே’ தலைவர்களாலும் கண்டிய சாசனம் எழுதப்பட்டது. எமது நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் ‘சிங்கலே’ என்ற பெயரைத் தொடர்ந்தும் நாம் பயன்படுத்தியிருந்தால் இந்த நாட்டிலுள்ள அனைவரும் ‘சிங்களவர்களாகவே’ இருந்திருப்பார்கள்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பல்லினங்களைக் கொண்ட நாடுகளாகவே உள்ளன. ஆனால் பொதுவாக நாடுகளில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினர் மற்றும் பெரும்பான்மை மதங்களை அடிப்படையாகக் கொண்டே அந்தந்த நாடுகள் அடையாளங் காணப்படுகின்றன.

ஆகவே எமது நாடானது சிங்கள பௌத்த நாடு என அழைக்கப்படுவதை எவரும் எதிர்க்க முடியாது. ஏனெனில் இந்த நாட்டில் 74 சதவீதமான சிங்களவர்களும் இவர்களில் 85 சதவீதமானவர்கள் பௌத்தர்களாகவும் உள்ளனர். இதுவே உண்மையான நிலைப்பாடாகும்.

சிங்களவர்கள் வடக்கில் குடியேறுவதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் விரும்பவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கொழும்பிலுள்ள சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடாகும்.

முஸ்லீம் நாடொன்றில் வாழும் முல்லாக்களை முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு துன்பப்படுத்தினால், அவரது தலை துண்டிக்கப்படும். ஆனால் இது சிங்கள பௌத்த நாடு என்பதை விக்னேஸ்வரன் அறிந்துள்ளதால் தான் அவர் தனது அதிருப்திகளை வெளியிட்டு வருகிறார்.

பௌத்தர்கள் ஏனைய மதங்களை மதிக்கின்றனர். இதன் காரணமாகவே இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

வெசாக் போயா தினத்தை அனைத்துலக விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ஜெனீவாவில் வைத்து லக்ஸ்மன் கதிர்காமர் பரிந்துரை செய்திருந்தார். இதுவே உண்மையான நல்லிணக்கமாகக் காணப்பட்டது. ஆனால் இன்று இந்த நல்லிணக்கத்தை விக்னேஸ்வரன் போன்றவர்கள் அழிக்க முயற்சிக்கிறார்கள்.

வழிமூலம் – சிலோன் ரூடே
மொழியாக்கம் – நித்தியபாரதி

Facebook Comments
Total Page Visits: 11 - Today Page Visits: 2