பேஸ்புக், ருவிட்டர் புதிய வசதிகள் அறிமுகம்

Advertisement

பேஸ்புக் நிறுவனம் நேற்று (டிசம்பர் 17) ஸ்னூஸ் என்ற வசதியை புதிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் குறிப்பிட்ட நபர்களை 30 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக தடை செய்து வைக்கும் வசதியை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பிளாக் என்ற வசதியின் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத நபரின் தகவல்களை நிரந்தரமாகத் தடைசெய்ய முடியும். ஆனால் தற்போது வெளியாகி உள்ள இந்த ஸ்னூஸ் வசதியின் மூலம் 30 நாட்கள் தற்காலிகமாக மட்டும் ஒரு நபரின் தகவல்களை தடை செய்து வைக்க இயலும்.

இதன் மூலம் தடைசெய்யப்பட்ட நபர், பயனரின் தகவல்களை காண இயலாது. ஒரு தனி நபர் மட்டுமின்றி ஒரு குரூப்பினை தற்காலிகமாகத் தடை செய்யவும் இந்த ஸ்னூஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் தேவையற்ற செய்திகளை தடைசெய்து தேவையான தகவல்களை மட்டும் பயனர்கள் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வசதியை ஒரு போஸ்டின் மேலே உள்ள ஆப்ஷன் வசதியை கிளிக் செய்வதன் மூலம் பெற முடியும்.

ஸ்ட்ரோம் வசதியை வெளியிட்டுள்ள ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனம் நீண்ட நாள் சோதனையை முடித்து ட்விட்டர் ஸ்ட்ரோம் வசதியை வெளியிட்டுள்ளது. தெரட்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள வசதியின் மூலம் பயனர்கள் நீண்ட தகவல்களைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து கொள்ள முடியும்.

ட்விட்டர் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த வசதியைப் பரிசோதனை செய்துவந்தது. ஆனால், சிறுசிறு பிழைகள் இருந்த காரணத்தால் இந்த அப்டேட் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் ட்விட்டர் வெளியிட்ட அப்டேட்டில் 140 எழுத்துகளை 280 எழுத்துகளாக உயர்த்தியது.

அதன் பின்னர் ட்விட்டர் ஸ்ட்ரோம் வசதியைப் பரிசோதனை செய்து வந்தது. ஐரோப்பிய நாடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்ட இந்த வசதி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியாகி உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வசதியைப் பயன்படுத்த பயனர்கள் அதில் வழங்கப்பட்டுள்ள ப்ளஸ் சிம்பலை அழுத்த வேண்டும். ஒருபகுதிக்கு 280 எழுத்துகள் பயன்படுத்தலாம். அதாவது ப்ளஸ் சிம்பலை பயன்படுத்தி மொத்தமாக 25 பகுதிகளைத் தொடர்ச்சியாகப் பதிவிட முடியும்.

Facebook Comments