கோவாவில் சோனியாகாந்தி என்ஜோய்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போது கோவாவில் தனது விடுமுறையைக் கழித்து வருகிறார். ஜனவரி முதல் வாரத்தில் அவர் மீண்டும் டெல்லி திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி, டிசம்பர் 16ஆம் தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனாலும் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவராக சோனியா காந்தி நீடித்து வருகிறார். இதனால், விரைவில் அவர் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஓய்வுபெறுவார் என்ற தகவல் வலுவற்றுப் போனது.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி செயல்பட்ட விதம் பற்றிய ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து, அவர் கோவாவில் ஓய்வெடுக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் துணைத்தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, அவரது தாயார் சோனியா விடுமுறை ஏதுமற்று செயல்பட்டு வந்தார். அப்போது, ராகுல் அடிக்கடி விடுமுறையில் வெளிநாடு சென்றுவருவது வழக்கமாக இருந்தது. இப்போது ராகுல் கட்சிப்பணிகளை கவனித்துக்கொள்ள, சோனியா காந்தி கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது விடுமுறையைக் கழித்து வருகிறார்.

ஹோட்டலில் தங்கியிருப்பவர்களோடு சேர்ந்து அவர் செல்பி எடுத்துக்கொள்வதாகவும், மிக உற்சாகமாக விடுமுறையைக் கழித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுறுதல் பிரச்சனை இருந்துவரும் நிலையில், மூச்சுத்திணறல் குறைபாட்டால் அவதிப்படும் சோனியா டெல்லியிலிருந்து வேறு எங்காவது சென்று தங்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், சோனியா கோவாவில் இருந்து வருவதாகவும், வரும் ஜனவரி முதல் வாரத்தில் அவர் டெல்லி திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Facebook Comments