கூகுளால் ஏற்படும் நோய் தொடர்பில் எச்சரிக்கை

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், கூகுள் போன்ற தேடுபொறிகளைப் பல்வேறு தேடல்களுக்காகப் பயன்படுத்திவருகிறோம். இதனால், மூளையின் நினைவாற்றலைத் தூண்டும் கிரே செல்கள் அழிந்து மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என்று பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் ‘டிமென்சியா’ எனப்படும் மறதி நோயால் 4 கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வருகிற 2050ஆம் ஆண்டில் இந்நோயினால் 13 கோடியே 10 லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. மறதி நோயைக் குணப்படுத்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தியும் அதற்குச் சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை.

இது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பிரிட்டனைச் சேர்ந்த செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபிராங்க் கன்மூரே ஈடுபட்டார். “மூளை ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிகவும் இன்றியமையாதது; மூளைக்கு வேலை கொடுத்தால்தான் அது ஆரோக்கியத்துடன் திகழும் ஆனால், தற்போதைய காலகட்டத்தில் நாம் நமது இணையதளத்தைக் கொண்டே அனைத்துச் செயல்களையும் செய்துவிடுகிறோம்.

நமக்கு மறந்துபோன ஏதாவது ஒரு தகவலை மீண்டும் பெற வேண்டும் என்றால், அதை மீண்டும் நினைவாற்றலிருந்து தேடிப் பார்ப்பதற்குப் பதிலாக இணையதளத்தில் தேடி எளிதில் பெற்று விடுகிறோம். இதனால் மூளையின் நினைவாற்றலைத் தூண்டும் கிரே செல்கள் அழிந்து மறதி நோய் உண்டாகும் அபாயம் அதிகரிக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

Total Page Visits: 65 - Today Page Visits: 1