சட்டவிரோதமாக அகதிகளை நாட்டுக்குள் கடத்தியவருக்கு 1,489 ஆண்டுகள் சிறை

ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக செல்கின்றனர். பெரும்பாலோனோர் ஐரோப்பிய நாடுகளுக்கே அகதிகளாக செல்ல முடிவெடுக்கின்றனர். மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான படகு போக்குவரத்தில் அதிகமானோர் பயனிக்கின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் நுழைவு வாயிலாக இருக்கும் கிரீஸ் நாடு வழியே ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைகின்றனர். துருக்கி வழியாக கிரீஸ் எல்லைக்குள் செல்லும் இவர்களுக்கு உள்நாட்டில் இருந்து பலர் பணம் பெற்றுக்கொண்டு உதவுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிரீஸ் போலீசார் சிறப்பு ஆபரேஷன் நடத்தி பலரை கைது செய்தனர். அவர்களில் 23 பேருக்கு நேற்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டிக்கப்பட்டவர்களில் பலர் டாக்சி ஓட்டுநர்கள் ஆகும். 8 முதல் 1,489 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 54 வயதான ஒருவருக்கு 1,489 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 500 அகதிகளை கடத்தியதற்காக அவர் மீது 43 வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளன. கிரீஸ் சட்டத்தின் படி ஒருவருக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகளே சிறை தண்டனை விதிக்கப்படும். இருப்பினும், அவருக்கு 1,489 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments