பாலியல் கொலையாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது !

தாயை கொலை செய்து மும்பையில் தலைமறைவாக இருந்து சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் தப்பிச்சென்ற தஷ்வந்த் மீண்டும் போலீஸாரிடம் சிக்கினார்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்த தஷ்வந்த், பெற்ற தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை தனிப்படை போலீஸார் பிடித்தனர், நேற்று சென்னை அழைத்து வரும் வழியில் தஷ்வந்த் போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்றார். இன்று மீண்டும் அவரை தனிப்படை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்துக்கொன்ற தஷ்வந்த் போலீஸாரால் கைது செய்யபட்டு சிறுமி கொலை, பலாத்காரம் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இடையிலேயே வெளியே விடப்பட்டார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை தஷ்வந்தின் தாயார் சரளா படுகாயங்களுடன் அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த தஷ்வந்த் வீட்டிலிருந்த நகை பணத்துடன் தலைமறைவானார். தஷ்வந்தைப் பிடிக்க போலீஸார் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தஷ்வந்தின் செல்போனையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் முறைப்படி தஷ்வந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் போட்டு அழைத்துச் செல்லும்படி மும்பை போலீஸார் கூறியதன் அடிப்படையில் நேற்று மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சென்னை போலீஸார், சனிக்கிழமை புழல் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வர முடிவு செய்து அழைத்து வரும் வழியில் தஷ்வந்த் போலீஸார் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.

தஷ்வந்தை தப்பிக்க விட்ட போலீஸார் அவரை பல இடங்களிலும் தேடினர். ஆனால் அவர் கிடைக்காததால் மும்பை போலீஸில் புகார் அளித்தனர் சென்னை போலீஸாரின் புகாரின் பேரில் மும்பை விலேபார்லே போலீஸார் காவல்துறையின் பிடியிலிருந்து தப்பியோட்டம் 224 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். தஷ்வந்தின் புகைப்படத்தைக் கொண்டு விடிய விடிய மும்பை போலீஸார் தேடினர். பேருந்து, ரயில் நிலையங்களில் தஷ்வந்த் தப்பிக்க முடியாதபடி கடும் சோதனையிடப்பட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே தஷ்வந்தை கைது செய்த தனிப்படை ஆய்வாளர் சார்லஸ் இன்று மதியம் தஷ்வந்தை மடக்கிப் பிடித்தார். ஏற்கெனவே தஷ்வந்த் பதுங்கி இருந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய சார்லஸ் கண்ணில் தஷ்வந்த் சிக்கினார். அவரை மடக்கிப் பிடித்த சார்லஸ் பின்னர் மும்பை போலீஸில் ஒப்படைத்தார்.

ஏற்கெனவே தப்பி ஓடியதாக வழக்கு இருக்கும் சூழ்நிலையில் அவர் வழக்கை முடித்து வைத்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் டிரான்சிட் வாரண்ட் பெற்று விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.நாளை சென்னைக்கு அழைத்து வரப்படும் தஷ்வந்த் திங்கட்கிழமை சிறையில் அடைக்கப்படலாம்.

இது தொடர்பான வீடியோ இணைப்பு –

மேலும் இது தொடர்பான வீடியோ

சென்னை, மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடியில் குடியிருந்தவர் சேகர். பிரபல நிறுவனத்தில் வேலைபார்த்தவர். இவரது மனைவி சரளா. இவர்களது மகன் தஷ்வந்த். பொறியியல் பட்டதாரியான தஷ்வந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பாபுவின் 6 வயது மகளான ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

Total Page Visits: 69 - Today Page Visits: 3