இசையில் புதுமைகள் தேடும் தமிழின் குழந்தைகள் (Video)

இயல்பாகவே சந்தம் கொண்டு அமைந்தது தமிழ்மொழி. அதையே மூலக்கருவாகக்கொண்ட தமிழரின் வாழ்வில் இசை இணைந்தே இருப்பது வியப்புக்குரிய விடயமல்ல.

அதனால்த் தான் தாலாட்டில்த் தொடங்கி ஒப்பாரி வரை வாழ்க்கையோடு அது மிக இறுக்கமாகப் பிணைந்திருக்கிறது.

பொழுதுபோக்குக் கலைவடிவங்கள் பலவாக உலகில் திரிந்து, பரவுவதற்கு முதலே தன்னை, புத்தாக்கக் கலை வடிவமாக, நோய்தீர்க்கும் மருத்துவமாக, கையாள்கிற அளவுக்கு இசை தமிழருக்கு இசைந்து கொடுத்திருக்கிறது. இருந்தும் இசை என்பது ஒரு சாகரம் எனவுணர்ந்து, இன,மொழி,தேச எல்லைகளைக் கடந்த தேடலையும் தமிழன் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.

புதியவற்றைத் தேடும் வழியே இருந்தவை சிலவற்றை இழந்து வருவதும் அந்த உண்மைக்குள் கலந்துள்ள கசப்பான பக்கம். இருந்தும் காலவோட்டத்திற்குத் தகுந்தாற்போல் அவன் இசைத்தேடலும் நீண்டுகொண்டே செல்கிறது.

அண்மையில் கனடா நாட்டை வசிப்பிடமாக்கிக் கொண்ட சில புலம்பெயர் இளைஞர்களின் முயற்சியும் இத்தொடர்ச்சியின் கவனிக்கத்தகுந்த ஒரு விடயமாகியிருக்கிறது.

மேலைத்தேய இளஞர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் Rock இசையில் இந்த இளைஞர்கள் ஆக்கிய தமிழ்ப் பாடல் பலரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. இதுவரை தமிழில் சொல்லும்படியாக இவ்வாறான ஒரு முயற்சி நிகழவில்லை என்பதும், எளிமையான மொழியில் பல இளைஞர்களின் வாழ்க்கை குறித்த பார்வையை எடுத்துச்சொல்வதும் அதற்கான காரணங்கள். இக்கட்டுரைக்கான அவசியத்தையும் அதுவே ஏற்படுத்தியது எனலாம்.

மேலோட்டமாகப் பார்த்தால் இசைத்தொகுப்புகள், பாடல்கள், தமிழில் ஏராளமாக வந்துகொண்டு தானே இருக்கின்றன, இதைமட்டும் கிலாகித்துப்பேச என்ன இருக்கிறது என்ற கேள்வி எழக்கூடும். Rock இசையென்பது என்ன? அது மேலைநாடுகளில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கக் காரணம் என்ன? ஏற்கனவே மேலைத்தேய சரக்குகளால் நிரம்பி வழியும் தமிழ் இசையுலகில் இன்னுமொரு இசைவடிவம் நுழைவதால் சொல்லும்படியாக என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? போன்ற கேள்விகளுக்கான பதில்களைப் பெறமுனைந்தால் இந்த முயற்சி மற்றவற்றிலிருந்து வேறுபடுவதை உணரமுடியும்.

மேலைத்தேய நாடுகளில் 1960களுக்கு பின்னர் மிகவேகமாக பரவிவரும் ஒரு இசைவடிவம் Rock Music. மேடைப் பாடல்களாக, இசைத்தொகுப்புகளாக ஏராளமானவர்களை அது சென்றடைகிறது. உலகின் மிகப்பெரிய அரங்குகளை ரசிகர் பட்டாளத்தால் நிரப்பிக்கொள்ளும் தகவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் இதன் பிடியில் கட்டுண்டு கிடக்கின்றனர் எனலாம்.

இந்த இசையின் காய்ச்சல் பல்வேறு காரணங்களால் புலம்பெயர்ந்துள்ள இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. தமிழில் பேச மட்டுமே முடியும், அல்லது அதுவும் முடியாது எனும் நிலையில் உருவாகி வரும் புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம், மூன்றாம் சந்ததிகளை சமகாலத்திலுள்ள ஏனைய வடிவங்களை விட இந்த இசைவடிவம் இலகுவாக இழுத்துக் கொள்கிறது.

இந்த இடத்தில்த்தான் இலகு தமிழில், குறைந்த பின்னணியோடு, இளையோரைக் கவரும் rock music ஆக வெளியான தமிழ்ப்பாடல் கவனிப்பை பெறுகிறது.

சுயம் விட்டு விலகிச்செல்லும் தன் அடுத்த தலைமுறையை ஆற்றாமையோடு பார்த்து நிற்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும், இனம் சார்ந்த,மொழி சார்ந்த விடயங்களை தன் சந்ததிக்குக் கடத்த வழியின்றித் திணறும் அவர்களின் ஆற்றாமைக்கும் இது போன்ற முயற்சிகள் ஒரு கலங்கரை விளக்கு.

இருப்பினும் கலையும் மொழியும் கூட ஒருவகையில் கருவிகள் தான். அவை யாரால் பிரயோகிக்கப்படுகின்றன, எப்படிப் பிரயோகிக்கப்படுகின்றன, போன்றவையே அவற்றின் விளைவுகளைத் தீர்மானிக்கும்.

அந்தவகையில் கருவிகளுக்குப் பஞ்சமில்லாத தமிழரின் இசையுலகில் Rock music எனும் கருவியும் இப்போது இருக்கிறது. அதைப் பயன்படுத்தத்துணிந்த கஜன் கனகவிநாஜகத்தையும் அவரது Kaja Band குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள். என்பதோடு இதுபோன்ற முயற்சிகளை கண்டும் கடந்துபோகும் மனநிலையை மாற்றி, அனைவரும் நின்று பாராட்டி ஊக்கப்படுத்தினால் தொன்மையின் பெருமை நிச்சயமாக தொடர்விலும் தொடரும்.

கஜா பாண்ட் இன் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்…

– வேணுதன் மகேந்திரரட்ணம்

Facebook Comments