திரைப்படமாகிறது சங்கர் – கௌசல்யா கதை

உடுமலைப்பேட்டை சங்கர் – கௌசல்யா காதல் கதையை மையமாகக் கொண்டு ‘மாறாத சமூகம்’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை உருவாக்க உள்ளனர்.

உடுமலை கௌசல்யா சங்கரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மனதுக்குப் பிடித்தவனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் என்பதற்காகப் பட்டப்பகலில் நடு வீதியில் சங்கரையும், கௌசல்யாவையும் கொடூரமாக வெட்டியது கௌசல்யாவின் குடும்பம். அந்தப் பயங்கரத்தில் அந்த இடத்திலேயே சங்கரை பலி கொடுத்த கௌசல்யா, கடும் மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு உயிருடன் மீண்டு வந்தார். இந்தச் சம்பவம் அப்போது வாட்ஸ்அப்பில் வெளிவந்தபோது தமிழகமே அதிர்ந்தது.

சங்கரின் நினைவுகளோடு ஆறா வடுக்களுடன் வாழ்ந்தவந்த கௌசல்யா தமிழகமெங்கும் நடக்கும் சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக முதல் ஆளாகக் குரல் கொடுத்து வருகிறார். சங்கர் – கௌசல்யா கலப்புத் திருமணத்தை விரும்பாத கௌசல்யாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செய்த படுகொலை இது என்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்து வழக்குப் பதிவானது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், டிசம்பர் 12ஆம் தேதி திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட ஆறு பேருக்குத் தூக்கு தண்டனை விதித்தும், தாய் அன்னலட்சுமி உட்பட மூன்று பேரை விடுவித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சங்கர் – கௌசல்யாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு மாறாத சமூகம் என்ற பெயரில் பங்கஜ் எஸ்.பாலாஜி படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ‘அ ஆ இ ஈ’ திரைப்பட பட்டறை சார்பாக என்.மணிகண்டன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த மற்ற அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments