கோதாரி விழுந்த கொத்து ரொட்டி

தமிழர்கள் எப்படி இந்த கொத்துரொட்டிப் பழக்கத்துக்கு ஆளானார்கள் என்பது தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் நாலு பெடியள் செட்டாகிவிட்டால் தின்னுவது கொத்து ரொட்டி. கொழும்பில் வாழும் தமிழ் பிரம்மச்சாரிகளின் மெயின் சாப்பாடு கொத்து ரொட்டி.

பும்பெயர் தேசத்தில் எல்லாக் கலை கலாச்சார நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், சந்திப்புகள், பார்ட்டிகள், விளையாட்டுப் போட்டி கள் அனைத்திலும் கொத்து ரொட்டிதான் மெயின் விற்பனை.
அதோடை, ரோல்ஸ், சிக்கின்/மட்டன்/மரக்கறி ரொட்டி.

அனைத்தினதும் அடிபடை மூலப்பொருள் இந்த அமெரிக்கன் வெள்ளைக் கோதுமை.

இது ஒரு காலத்தில் “கூப்பன் மா” எனப்பட்டது. (கூப்பன் கடையில் வழங்கப்படும் இலவச மா)

உலகிலேயே ஆரோக்கியம் அதிகம் “குறைவான” உணவுப் பண்டம் எது என்று கேட்டால் அது அமெரிக்கன் வெள்ளைக் கோதுமை மா என்று அடித்துச் சொல்வேன்.

கோதுமைத் தானியத்தின் ஆரோக்கியமான பகுதி அதனை அரைக்கும் போது வரும் “தவிடு” ஆகும். அந்த தவிட்டை அடியோடி அப்புறப்படுத்தி எடுத்த பின் வருகிற மீதமுள்ள சக்கைதான் இந்த வெள்ளைக் கோதுமை மா. தமிழ்நாட்டில் இதை “மைதா மா” என்பார்கள்.

அமெரிக்காவில் தேவைக்கு அதிகமாக மிஞ்சிப் போகும் இந்த சக்கையை பொட்டாசியம் போட்டு சுத்த “வெள்ளை” ஆக்கி எம்மை தின்ன வைத்தார்கள் காலனித்துவ ஆட்சியாளர்கள். அதையே எமது பிரதான உணவுப் பண்டமும் ஆக்கினார்கள். அதிலும் பாவப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மூன்று நேர உணவாக ஆனது சத்தேயில்லாத இந்த பாழாய் போன வெள்ளைமா “ரொட்டி”.

வியர்வை சிந்தி தினமும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு “டயப்பட்டிக்” வர வாய்ப்பே இல்லை. ஆனால் இன்று அதிகமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் டயப்பட்டிக் நோய்க்கு ஆளாகி உள்ளனர். அதற்கு காரணம் இந்த அமெரிக்கன் வெள்ளை மாவும் அவர்கள் அன்றாடம் உண்ண வேண்டியிருந்த இந்த கூப்பன்மா ரொட்டியும் ஆகும்.

ஆரோக்கியக் கேடு விளைவிக்கும் அத்தகைய அமெரிக்கன் மாவில் செய்யப்படும் கொத்து ரொட்டியையும், கோதாரிச் சாப்பாடுகளையும் எங்கடை “இனமானச் சிங்கங்கள்” ஏதோ ஈழத் தமிழரின் பண்பாட்டு உணவு போலவும் ஆரோக்கியமான ஆகாரம் போலவும் கூவிக் கூவிக் கொடுக்கிறார்கள். அதைத் தின்ன ஆக்கள் லைனில் நிற்கிறார்கள்.
இந்த கொத்து ரொட்டியை இலங்கையில் அறிமுகம் செய்தவர்கள் மலையாள ஹோட்டல் வியாபாரிகள்.

ஆனால் கேரளாவில் எங்கும் கொத்து ரொட்டிக்கு இவ்வளவு டிமாண்ட் எங்குமில்லை. அவர்கள் மிகவும் ஆரோக்கியமான உணவு வகைகளையே உண்கிறார்கள். அந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கம் எங்கள் பண்பாட்டிலும் இருக்கு.

பன்றி எப்பவும் (எதையோதான்) தின்னுமாம்.

அது மாதிரித்தான் நாம் எம்மிடத்தில் எவ்வளவோ ஆரோக்கியமான உணவுப் பண்பாடு இருந்தும் இந்த பாழாய் போன அமெரிக்கன் மாவுக்கும், கொத்து ரொட்டிக்கும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியிறம்.

ஒரு இனம் முதலில் தனக்கான ஒரு ஆரோக்கியமான உணவுப் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். மொழி மட்டுமல்ல, கலை கலாச்சாரம் மட்டுமல்ல… உணவும் எமது அடையாளந்தான்.

பிற பண்பாடுகளில் இருந்து நல்ல விடயங்களை உள் வாங்குவது எப்படி தவறில்லையோ அவ்வாறு பிற மக்களின் உணவுப் பழக்கங்களில் இருந்து நல்ல உணவுகளையும் உணவுப் பழக்கத்தையும் உள்வாங்குவதில் தவறில்லை.

ஆனால் கொத்து ரொட்டி ஒரு சீரழிவு உணவுப் பழக்க வழக்கம் – பிட்சா, KFC, McDonald’s போல!
தமிழர்களின் உணவுப் பண்பாட்டை சிதைப்பதும் இனவழிப்பின் ஒரு அங்கமே.

கொத்து ரொட்டி மீதான எமது மோகம் ஒருவகை “சுய இனவழிப்பு! ”
(இன்று ஒரு நடன நிகழ்ச்சிக்கு போன இடத்தில் பசிக்கு சாப்பிட கொத்து ரொட்டியையும் ரோல்ஸ் ஐயும் தவிர வேறை ஒண்டும் இருக்கவில்லை. அந்த கடுப்பில் எழுதப்பட்ட பதிவு இது)

நன்றி: ஞானதாஸ் காசிநாதர்-

Facebook Comments