மைசூர் மன்னருக்கு நேரடி ஆண் வாரிசு: 400 ஆண்டுகளுக்கு பின் பிறந்தது (Video)

ஸ்ரீரங்கபட்டணாவை ஸ்ரீரங்கராயா ஆட்சி செய்தார். நோய் தீர்வதற்காக மனைவி அலமேலம்மாவுடன் ஸ்ரீரங்கராயர் தலகாட்டிற்கு சென்றார். அதை அறிந்த மைசூர் உடையார் மன்னர், ஸ்ரீரங்கபட்டணா மீது போர் தொடுத்து தன் வசப்படுத்தினார். இந்த தகவலை கேட்ட ஸ்ரீரங்கராயர் இறந்தார். சோகத்திலிருந்த அலமேலம்மாளிடம் ஆபரணங்களை பறித்து வர படை வீரர்களை உடையார் மன்னர் அனுப்பி வைத்தார். இதில் கோபம் கொண்ட அலமேலம்மா ‘‘தலகாடு மண்ணாகட்டும், நதி குட்டையாகட்டும், மைசூர் மன்னருக்கு வாரிசுகள் இல்லாமல் போகட்டும்’’ என சாபமிட்டு காவிரி ஆற்றில் குதித்து உயிரை துறந்தார். இந்த சாபத்தினால் மைசூர் மன்னருக்கு ஆண் வாரிசு இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

கடந்த 400 ஆண்டுகளாக மைசூர் மன்னர் வம்சத்தில் தத்தெடுக்கும் வாரிசுகளுக்குதான் பட்டம் சூட்டப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு மன்னர் நரசிம்மராஜ உடையார் மரணத்திற்கு பிறகு மன்னர் குடும்ப வாரிசு யார் என்ற கேள்வி எழுந்தபோது, நரசிம்மராஜ உடையாரின் சகோதரி மகன் யதுவீரை பிரமோதாதேவி தத்தெடுத்து கடந்த இரண்டாண்டுக்கு முன் வாரிசாக பட்டம் சூட்டினார். அதை தொடர்ந்து ராஜஸ்தான் மன்னர் குடும்பத்தை சேர்ந்த திரிஷிகாவை யதுவீராவுக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் செய்து வைத்தார்.

இந்த தம்பதிக்கு நேற்று முன்தினம் இரவு ஆண் குழந்தை பிறந்தது. யதுவீரா-திரிஷிகா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், யது வம்சத்திற்கு அலமேலம்மா விட்ட சாபம் நீங்கியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

400 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி ஆண் வாரிசு பிறந்துள்ளதை மன்னர் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். மைசூர் அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் அரண்மனை வளாகத்தில் அலமேலம்மாவுக்கு கட்டியுள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

Facebook Comments