ஒவ்வொரு மகனுக்கும் ஒரு பாடம்… ஒவ்வொரு அப்பாவுக்கும் ஒரு நம்பிக்கை…

`பிறர் மேல் காட்டும் அக்கறை என்கிற எளிய செயலை வீரம் என்றும் சொல்லலாம்’ – அமெரிக்க நடிகர் எட்வர்டு ஆல்பர்ட் (Edward Albert) தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இதைப் போய் யாராவது

`வீரம்’, `சூரத்தனம்’ என்று சொல்வார்களா?

நிச்சயம் சொல்லலாம். ஏனென்றால், இந்த குணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டே வருகிறது. பிறர் மேல் அக்கறை காட்டுவதற்கு ஆள்களே இல்லை. அப்படிப் பார்த்தால், ஒருவகையில் இது வீரம்தானே! நாம் ஒவ்வொருவருமே இந்த விஷயத்தில் சுயபரிசீலனை செய்துகொள்வது நல்லது.

பிறர் மேல் காட்டும் கரிசனம் எவ்வளவு நல்லவற்றையெல்லாம் கொண்டு சேர்க்கும் என்று நாம் யோசிப்பதே இல்லை. அக்கறைகொள்ள வேண்டியவர்களை கண்டுகொள்ளாமல் விடுகிறோம்; பார்த்துப் பார்த்து கவனிக்கவேண்டியவர்களை பரிதவிக்கவிடுகிறோம். ஆங்கிலத்தில் `Caring’ என்று சொல்லப்படும் அக்கறையைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். இந்தக் கதை அன்பின் வலிமையை, மனிதர்கள்பால் அக்கறைகொள்ளவேண்டியதன் அவசியத்தை வெகு இயல்பாகச் சொல்கிறது.

அந்த வீட்டில் அப்பா, மகன் இருவர் மட்டும்தான் இருந்தார்கள். அப்பாவுக்கு வயதாகிவிட்டது. நடை தளர்ந்துவிட்டது. ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியவில்லை. பதினைந்தடி தூரம் நடந்தால்கூட கால் மூட்டுகளில் தாங்க முடியாத வலி. கைகளில் சதா ஒரு நடுக்கம். பேசும்போது வாயிலிருந்து எச்சில் வழிகிறது. அவருக்கு ஒரே மகன். அவர் மேல் மரியாதையும், அக்கறையும், அளவில்லாத அன்பும் கொண்ட மகன். அவன் வேலைக்குப் போகும் நேரங்களில் அவரை கவனித்துக்கொள்ள வீட்டில் ஆட்கள் இருந்தார்கள். ஆனாலும் அவனுக்குத் தானே அவரருகில் இருந்து கவனித்துக்கொண்டால்தான் திருப்தி.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அவன் வீட்டிலிருந்தான். அப்பா, அவனை அழைத்தார்.

“வீட்டுச் சாப்பாட்டைச் சாபிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சுப்பா. இன்னிக்கி என்னை எங்கேயாவது ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயேன்…’’

“சரிப்பா’’ என்றவன் உடனே தயாரானான். அப்பாவுக்கு அவசியமாகத் தேவை என நினைத்த உடைமைகளை சேகரித்துக்கொண்டான். அவரின் மருந்து, மாத்திரைகள் வைத்திருந்த பெட்டியை சிறு தோள் பையில் போட்டுக்கொண்டான். ஒரு டிராவல்ஸ் ஏஜென்ஸியை அழைத்து, காருக்கு ஏற்பாடு செய்தான். அப்பாவை பத்திரமாக அதில் ஏற்றி, நகரிலேயே அவனுக்குப் பிடித்த, தரமான ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போனான்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த ரெஸ்டாரன்ட் நிறைந்திருந்தது. அவன் முன்கூட்டியே போன் செய்து ஒரு மேஜையை அப்பாவுக்கும் அவனுக்குமென புக் செய்திருந்தான். உடல் நடுங்க, தட்டுத்தடுமாறி நடந்து வரும் ஒரு முதியவர்… அவரைக் கையைப் பிடித்துக்கொண்டு அழைத்துவரும் ஓர் இளைஞன். அந்த ஹோட்டலுக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள், ரெஸ்டாரன்ட் பணியாளர்கள், மற்றவர்கள் இருவரையும் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

அவன், அவரை பத்திரமாக அழைத்துப்போய் ஒரு நாற்காலியில் உட்காரவைத்தான். அவர் வெகு பலவீனமாக இருந்தார். ஆனால், சாப்பிடும் வேட்கை குறையாமல் இருந்தது. அவருக்குப் பிடித்ததையெல்லாம் கவனமாக ஆர்டர் செய்தான் அவர் மகன். உணவு வந்தது. அப்பா கைநடுங்க, அதே நேரம் ஆசை ஆசையாகச் சாப்பிட ஆரம்பித்தார். வாயில் எச்சில் வழிந்தது. சாப்பிடும் உணவு சட்டை, பேன்ட்டிலெல்லாம் சிதறியது. ஒரு சாஸை எடுத்தபோது அது தவறி, மகனின் சட்டையின் மேல் பட்டது. ஒரு நாப்கினை எடுத்து நாசூக்காக அதைத் துடைத்துக்கொண்டான். சுற்றியிருந்தவர்கள் கொஞ்சம் அருவெறுப்போடு இவர்கள் இருவரையும் பார்த்தார்கள். அவன் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. யாரையும் பொருட்படுத்தவும் இல்லை. அப்பாவை கவனித்துக்கொண்டிருந்தான்.

ஒரு பெண்மணி மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்… “இந்த வயசுல சாப்பாட்டு மேல ஆசையைப் பாரு…’’

அப்பா சாப்பிட்டு முடித்ததும், அவரை மெள்ள நடக்கச் சொல்லி, கைகழுவும் இடத்துக்கு அழைத்துப் போனான். அவர் சட்டையில் ஒட்டியிருந்த உணவுத் துகள்களை கவனமாக அகற்றினான். அவர் கையையும் முகத்தையும் அழகாகக் கழுவிவிட்டான். ஒரு துண்டால் அவரைத் துடைத்து பளிச்சென்று ஆக்கினான். அதுவரை தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்திவைத்திருந்த அவருடைய மூக்குக் கண்ணாடியை எடுத்து அவருக்கு மாட்டிவிட்டான். மேஜைக்குத் திரும்பினான். அந்த ரெஸ்டாரன்ட்டே அவர்கள் இருவரையும் கவனித்துக்கொண்டிருந்தது.

பில் வந்தது. தொகையைச் செலுத்தினான். அப்பாவும் அவனும் எழுந்தார்கள். அவன் வழக்கம்போல அவரைப் பிடித்துக்கொண்டு மெள்ள நடந்தான்.

ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்திருந்தவர்களில் ஒரு வயதானவர் குரல் கொடுத்தார்… “தம்பி… ஒரு நிமிஷம்…’’

அவன் திரும்பிப் பார்த்தான். “என்ன சார்?’’

“தம்பி… நீ இங்கே ஏதோ ஒண்ணை விட்டுட்டுப் போறே… நல்லா கவனிச்சியா?’’

“அப்பிடியா? நான் எதையும் விடலையே சார்… எல்லாம் இருக்கே…’’ அவன், தான் கொண்டு வந்திருந்த பொருள்களை ஒருமுறை சரிபார்த்தான்.

“ஆமாம்… விட்டுட்டுத்தான் போறே… ஒவ்வொரு மகனுக்கும் ஒரு பாடம்… ஒவ்வொரு அப்பாவுக்கும் ஒரு நம்பிக்கை… அதை இங்கே விட்டுட்டுத்தான் போறே…’’

ரெஸ்டாரன்ட்டில் இப்போது ஒரு சத்தமில்லை. அவன், அப்பாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு வெளியேறினான். அப்பா, தன் நடுங்கும் கரங்களால் அவன் கைகளை இறுகப் பற்றியிருந்தார்.

Total Page Visits: 102 - Today Page Visits: 2