தமிழில் முதன்முறையாக சரித்திரப் படத்துக்கு நாயகியாகிறார் சன்னி லியோன்

பாலிவுட் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் முதன்முறையாகத் தமிழில் உருவாகும் சரித்திரப் படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம், சௌகார்பேட்டை போன்ற படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் தன்னுடைய முதல் படமாக இதைத் தயாரிக்க இருக்கிறார் பொன்ஸ் ஸ்டீஃபன். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம், மிகுந்த பொருட்செலவில் தென்னிந்திய கலாசாரங்களை மையப்படுத்தி உருவாக இருக்கிறது.

இந்தப் படம் குறித்து தெரிவித்த சன்னி லியோன், “இந்தச் சரித்திர படத்தில் நடிக்க கத்திச்சண்டை, குதிரையேற்றம் மற்றும் சண்டைக் கலைகளையும் கற்று வருகிறேன். பிரமாண்ட படத்துக்காக 150 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்துக்குப் பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும்.

ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி.சி.வடிவுடையான் இந்தக் கதையை எனக்குச் சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்காகத் தயாராக ஆரம்பித்து விட்டேன். தென்னிந்தியாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒரு நேரடி தமிழ்ப் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. இதில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்க உள்ளனர். முன்னணி நடிகர் ஒருவரை இதில் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Total Page Visits: 105 - Today Page Visits: 2