விஸ்வரூபம் 2: என்ன செய்கிறார் கமல்?

விஸ்வரூபம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் வேளையில் படப்பிடிப்பு குறித்தான தகவலை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கமல் ஒருபக்கம் அரசியலில் களமிறங்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் மற்றொருபுறம் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை முடிக்கும் வேலைகளில் தீவிரம் காட்டியுள்ளார். கமலுக்குக் காலில் ஏற்பட்ட காயத்துக்கு நடந்த சிகிச்சைகள் காரணமாகவும் அரசியலில் கவனம் செலுத்தி வருவதாலும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிவடையாமல் தள்ளிப்போனது. இந்த நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு நவம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கமல் மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதற்கான புகைப்படத்தை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதுடன், “தமிழில் விஸ்வரூபம் 2, இந்தியில் விஸ்வரூப் 2 ஆகியவற்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெண் ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நாட்டின் ஒரே பயிற்சி மையமான சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தால் நானும் இந்த நாடும் பெருமை கொள்கிறோம். பெண்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த எனது பாரத தாய்க்கு. மா து ஜே சலாம் (தாயே உனக்கு வணக்கம்)” என்று பதிவிட்டுள்ளார்.

விஸ்வரூபம் 2-வின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் படத்தின் ட்ரெய்லரை அடுத்த மாதமும், இசை வெளியீட்டை அடுத்த ஆண்டு நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.

Total Page Visits: 100 - Today Page Visits: 3