என்கவுண்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் (Video)

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொள்ளை கும்பலைப் பிடிக்க போலீஸார் நடத்திய என்கவுண்டரில், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அப்பாவி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற பின், கிரிமினல் குற்றவாளிகளுக்கு எதிரான என்கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு நடைபெற்றுள்ள 900 என்கவுண்டர்களில் 196 பேர் படுகாயமும், 33 உயிரிழப்புகளும் அடங்கும்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் மதுரா அருகே மோகன்புரா என்ற கிராமத்தில், பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அவர்களைச் சரணடையுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து போலீஸாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மாதவ் பரத்வாஜ் என்ற 8 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. இதனையடுத்து போலீசார், அந்தச் சிறுவனை அக்கம்பக்கத்தினரிடம் ஒப்படைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான சிறுவன் மாதவின் தாத்தா ஷிவ் ஷங்கர் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “மூன்று போலீஸ்காரர்கள் எங்கள் கிராமத்திற்கு வந்து கொள்ளையர்கள் பற்றி விசாரித்தனர். பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோவில் அருகில் உள்ள மாடிக்கு வரும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது திடீரென போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தத் தொடங்கினர். இதில் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த என் பேரன் பலியாகிவிட்டான்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கி சூட்டில் யார் சுட்ட குண்டு அந்தச் சிறுவன் மீது பாய்ந்தது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. பிரேத பரிசோதனையின் போது தெரிய வாய்ப்புள்ளது. போலீஸார் முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கிராம மக்கள் கொடுத்துள்ள புகாரையடுத்து மதுரா நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Facebook Comments
Total Page Visits: 5 - Today Page Visits: 1