தமிழகத்தில் இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் இங்கிலாந்துப் பெண்கள் (Video)

பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்ட எம்மவர்களே விவசாயத்தை விட்டு ஒதுங்கிப் போகும் நிலையில், மேலை நாட்டவர்கள் எம்மூரில் தங்கியிருந்து விவசாயத்தை கற்றுக் கொண்டு இயற்கை விவசாயம் செய்யும் முறை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்திற்கு சமூக சேவை செய்ய வந்த இங்கிலாந்து நாட்டினர் இருவர் இங்கேயே தங்கி தமிழக கலாச்சாரங்களை கற்று குழந்தைகளுக்கு பாடமும் கற்பித்து வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரை சேர்ந்த க்லோவி எலிசபெத் மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஹன்னா ராஸ் இருவரும் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குள் நுழையும் முன்பு கிடைத்த ஓராண்டு விடுமுறையை தமிழகத்தில் கழிப்பதற்காக வந்துள்ளனர்.

இங்கு திருவள்ளூர் மாவட்டம் கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தில் இருவரும் தங்கி இயற்கை முறை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழகத்தின் கலாச்சாரத்தால் கவரப்பட்டு இங்கு இயற்கை விவசாயம், கோசாலையில் பசுக்களை பராமரித்தல், பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல் போன்ற பணிகளை செய்வதுடன் ஆர்வத்துடன் தமிழ் மொழியையும் பயின்று வருகின்றனர்.

இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரத நாட்டியத்தை ஆர்வமுடன் இருவரும் கற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பாரம்பரிய இயற்கை விவசாயம், மாற்றுபயிர் முறை கால்நடைவளர்ப்பு, முதியோர்களை பராமரித்தல், மற்றும் உணவு முறை ஆகியவற்றை கற்று இங்கிலாந்தில் செயல்படுத்துவோம் என க்லோவி மற்றும் ஹன்னா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் முதியோர்களிடம் அன்பு காட்டும் விதம் தங்களை பெரிதும் கவர்ந்துள்ளதாக தெரிவித்த இங்கிலாந்து மாணவியர், கடந்த ஓராண்டாக தமிழகத்தில் இருந்தது தங்கள் வாழ்நாள் முழுவதற்குமான பாடத்தை கற்றறிந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினர்.

Facebook Comments