தமன்னா மீது செருப்பு வீசியவர் கைது (Video)

நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை தமன்னாவை நோக்கி செருப்பு வீசிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் ஹிமாயத் நகர் பகுதியில் உள்ள கொண்டபுரில் மலபார் தங்கம் மற்றும் வைர நகைக்கடை திறப்பு விழா நேற்று (ஜனவரி 28) நடைபெற்றது. இந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக தமன்னா அழைக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க அந்தக் கடையின் அருகே ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். திறப்பு விழாவை முடித்துக்கொண்டு கடையில் இருந்து வெளியே வந்த தமன்னாவை நோக்கி கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசத்துடன் செருப்பைத் தூக்கி வீசி எறிந்தார்.

ஆனால், சற்றுக் குறி தவறிப் பறந்துவந்த செருப்பு புதிய நகைக்கடை பணியாளர் மீது விழுந்தது. அந்தச் சம்பவத்தின் வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. செருப்பு வீசிய நபரை நாராயன்குடா போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் சமீபகாலமாக தமன்னா நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்குப் பிடிக்காததால் அவரைச் செருப்பால் அடிக்க முயன்றதாகக் கைதான கரிமுல்லா (31) என்ற பட்டதாரி தெரிவித்துள்ளார்.

நகைக்கடை பணியாளர் அளித்த புகாரின் பேரில் கரிமுல்லா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமன்னா மீது செருப்பு வீச முயன்ற சம்பவம் சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Total Page Visits: 78 - Today Page Visits: 1