தொடர் வீடியோ கேமால் கோமா நிலைக்குச் சென்ற இளைஞன் (Video)

சீனாவில் 20 மணி நேரம் இடைவிடாமல் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள சைபர் கபே பிரவுசிங் சென்டரில் இளைஞர் ஒருவர் கடந்த மாதம் 27ஆம் தேதி மாலை வீடியோ கேம் விளையாடத் தொடங்கினார்.

விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் உணவு, நீர் அனைத்தையும் மறந்து மறுநாள் மதியம் வரை அவர் விளையாடியுள்ளார்.

வீடியோ கேம் விளையாடும்போது பாத்ரூமுக்குச் செல்வதைத் தவிர்த்து மற்ற எதற்கும் அங்கிருந்து நகரவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர் அவர் சுயநினைவை இழந்து உட்கார்ந்த நிலையிலேயே இருக்கையில் மயங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பின்னர், கை, கால்கள் அசைவின்றி இருந்த அந்த இளைஞரை மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

“அவன் சுயநினைவை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. அவனால் நகர முடியவில்லை. நாங்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்தோம்” என அருகிலிருந்த அவர் நண்பர் தெரிவித்தார். மேலும் அந்த இளைஞர் போதைப்பொருள் எதுவும் உட்கொண்டாரா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.

இதே போல் கடந்த ஆண்டு 21 வயது பெண் ஒருவர், மொபைலில் தொடர்ந்து 24 மணி நேரம் வீடியோ கேம் விளையாடியதால் ஒரு கண் பார்வையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 97 - Today Page Visits: 1