முதன்முறையாக அஜித்துடன் இணைகிறார் இமான்

இசையமைப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி சதம் அடித்திருக்கும் டி.இமான், முதன்முறையாக அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் இணையவிருக்கிறார்.

விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் தனது இசையமைப்பாளர் அத்தியாயத்தைத் தொடங்கிய இமானுக்கு, ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் 100ஆவது படமாகும். 100 படங்களுக்கு இசையமைத்திருக்கும் இமான், விஜய் உள்பட தமிழின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். ஆனால் அஜித்தின் படத்திற்கு மட்டும் இதுவரை இசையமைத்ததில்லை. அந்தக் கனவு அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மூலமாக நிறைவேறவிருக்கிறது.

விஸ்வாசம் படத்திற்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் அவர் விலகிவிட்டது உறுதியானது. இதனையடுத்து அஜித்தின் வேதாளம், விவேகம் படத்திற்கு இசையமைத்த அனிருத் இசையமைப்பதாகவும், விக்ரம் வேதா சாம் சி.எஸ் இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதியாகாமலே இருந்தது. இந்த நிலையில் விஸ்வாசம் படத்திற்கு இறுதியாக இமான் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்தான தகவலை இமானின் நெருங்கிய நண்பரும், இமானின் 100ஆவது படத்தின் இயக்குநருமான ஷக்தி சௌந்தர்ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் இமானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இமானின் சினிமா கேரியரை மைனாவுக்கு முன், மைனாவுக்குப் பின் என்று பிரித்துவிடலாம். ஏனெனில் அதற்கு முன்பு 30 படங்களுக்கு மேல் இசையமைத்த இமானுக்கு பெரிதான வரவேற்பு கிடையாது. மைனா படமே அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனை. அதேபோல் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மூலமாக இமான் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கவிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் புகழ்பெற்ற வசனத்தை இமான் டப்ஸ்மாஷில் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீரம், வேதாளம், விவேகம் படத்திற்குப் பிறகு மீண்டும் சிவாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் அஜித். விவேகம் படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

Total Page Visits: 77 - Today Page Visits: 2