உலகின் மிகப்பெரிய மூளைக் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை (Video) இணைப்பு

இளைஞர் ஒருவரின் மூளையில் 1.8 கிலோ எடையளவில் உருவான ட்யூமர் கட்டியை சுமார் 6 மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றிச் சாதனை புரிந்துள்ளனர். இந்தக் கட்டியே உலகில் மிகப் பெரிய மூளைக் கட்டியாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த அறுவைச் சிகிச்சை மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. சந்த்லால் பால் என்ற 31 வயது இளைஞருக்கு மூளையில் 1.8 கிலோ எடையுள்ள கட்டியால் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்ட நிலையில் சந்த்லால் பாலுக்கு மீண்டும் கண் பார்வை திரும்ப வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

“உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்த்லால் பாலின் தலையில் இருந்த கட்டி அவரது தலையைவிடப் பெரியதாக இருந்தது. இந்தக் கட்டிதான் உலகில் மிகப் ரிய மூளைக் கட்டியாக இருக்க வேண்டும். இந்தக் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை என்னுடன் சேர்ந்து 5 மருத்துவர்கள் மேற்கொண்டோம்.

சந்த்லாலுக்கு கடந்த 3 ஆண்டுகளாகவே மூளையில் கட்டி வளர்ந்திருந்த நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் அந்தக் கட்டி மிக வேகமாக வளர்ந்திருக்கிறது. அவருக்கு 10% கட்டி மட்டுமே கபாலத்துக்குள் வளர்ந்திருந்தது. மற்றவை வெளியே வளர்ந்ததால் இந்த அறுவைச் சிகிச்சையை எளிதாக மேற்கொள்ள முடிந்தது.

இந்த அறுவை சிகிச்சையின்போது சந்த்லாலுக்கு 11 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. மேலும் 3 நாட்கள் அவர் வென்டிலேட்டர் உதவியில் சுவாசித்துக்கொண்டிருந்தார். தற்போது அவர் உடல்நலம் தேறிவருகிறார். சந்த்லாலின் தலையில் வளர்ந்தது புற்றுநோய்க் கட்டியா என்பதைச் சோதிப்பதற்காக, கட்டியின் ஒரு பகுதியைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

2002ஆம் ஆண்டு மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் ஒருவருக்கு மூளையில் ஏற்பட்ட 1.4 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது. அதற்குப் பின் சந்த்லாலுக்கு ஏற்பட்டதே மிகப் பெரிய அளவிலான கட்டியாக இருக்கிறது” என அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் த்ரிமூர்த்தி நட்கர்னி கூறினார்.

Facebook Comments