மீண்டும் மணிரத்னத்தின் படத்தில் களமிறங்கும் அதிதி

மல்டி ஸ்டார்களால் உருவாகவிருக்கும் மணிரத்னத்தின் அடுத்த படத்திலும் நடிகை அதிதி ராவ் நடிக்கவிருக்கிறார்.

பாலிவுட் படங்களில் தொடர்ச்சியாக நடித்துவந்த அதிதி ராவை மணிரத்னம் தனது காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். பெரிதும் எதிர்பார்த்த இந்தப் படம் தோல்வியைத் தழுவியது. ஆனால் கார்த்திக் ஜோடியாக நடித்த அதிதி ராவ் கவனம் பெற்றார்.

இந்தப் படத்திற்குப் பிறகு பாலிவுட் சினிமாவுலகில் கவனம் செலுத்திய அதிதி, பூமி, பத்மாவத் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றார். இந்த நிலையில் காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்திற்காக சிம்பு கடுமையான உடற்பயிற்சியினை மேற்கொள்ளும் வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இப்படத்தை மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றவுள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் தொடங்கவுள்ளது.

Total Page Visits: 84 - Today Page Visits: 2