சிறீதேவி மரணத்தில் புதிய திருப்பம்

Advertisement

சினிமா ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீதேவி நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தடயவியல் துறையினர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

துபாயில் தனது உறவினரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, தான் தங்கியிருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டல் அறையின் பாத்ரூமில் மயங்கிவிழுந்ததில் குறைந்த ரத்த அழுத்தத்தால், மூளைக்குச் செல்லும் ரத்த சுழற்சியில் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக நேற்று (பிப்ரவரி 24) முன்தினம் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீதேவியின் உடல் துபாயில் உள்ள ரஷித் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அவரின் முக்கிய உறுப்புகள் தடயவியில் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்குக் கொண்டுவர அனில் அம்பானியின் தனி விமானம் நேற்று மாலை துபாய் சென்றது. நேற்றிரவே உடலைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் தடயவியல் பரிசோதனை முடிவுகள் கிடைக்கத் தாமதம் ஏற்பட்டதால் ஸ்ரீதேவியின் உடலைக் கொண்டுவருவதில் கால தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் துபாயில் ஒப்படைக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான தடயவியல் துறையினரின் அறிக்கையைத் துபாய் போலீஸார், அவரின் குடும்பத்தினர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த அறிக்கையில், ஸ்ரீதேவி தற்செயலாக நீரில் மூழ்கி (accidental drowning) உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து துபாய் நாட்டிலிருந்து வெளிவரும் `Gulf News’ வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரத்தப் பரிசோதனை அறிக்கையில் ஸ்ரீதேவியின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது (Traces of alcohol) உறுதி செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீதேவி, முதலில் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், மயங்கிய நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது. தற்போது அவர் மது அருந்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணையை துபாய் போலீஸார் மேற்கொண்டுவருகின்றனர். தடயவியல் அறிக்கை வெளியான நிலையில் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டுவருவதால் தாமதம் ஏற்படுகிறது.

இதனையடுத்து, ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு மும்பை கொண்டுவரப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்ரீதேவியின் உடலுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தக் காத்திருக்கின்றனர். அனைவரும் அஞ்சலி செலுத்திய பின் இறுதிச் சடங்குகள் நடைபெறவிருக்கின்றன.

மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், இயக்குநர் பாரதிராஜா உள்பட திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் மும்பைக்கு சென்றுள்ளனர்.

Facebook Comments
Total Page Visits: 11 - Today Page Visits: 6