தமிழ்நாடு பொலிஸின் பொறுக்கித்தனம் கைபேசிக் கமராவில் அம்பலம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களைத் தாக்கிய விவகாரத்தில் மூன்று போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், ஆரோ பகுதி அருகே இரு தினங்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளிடையே போலீசார் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை இளைஞர்கள் இருவர் படம் பிடித்துள்ளனர். இதைக் கண்ட போலீசார் இளைஞர்களை லத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் இதற்குத் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பணிபுரியும் காவல் துறை சிறப்பு ஆய்வாளர் முருகன், காவலர் சுரேஷ், ஐயனார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏடிஎஸ்பி ராஜாராம் நடத்திய விசாரணையில் போலீசார் தாக்கியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மூவரும் ஏற்கனவே ஆயுதப் படைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாகனச் சோதனையின் பேரில் போலீசார் மக்களிடம் இதுபோன்று கடுமையாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னை ஓஎம்ஆர் சாலையில் மணிகண்டன் என்பவரைக் காவல் துறையினர் மோசமாகப் பேசியதால் அவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, போலீசார் மக்களிடம் பொறுமையாகவும், மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. அதன் பிறகும் அதுபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 100 - Today Page Visits: 1