`வியூ இமேஜ்’ சேவையை திடீரென நிறுத்திய கூகுள்

கூகுள் நிறுவனம் அதன் தேடுதளத்தில் மிக முக்கிய அம்சங்களுள் ஒன்றான `வியூ இமேஜ்’ சேவையை இன்றுடன் நிறுத்தியுள்ளது. இந்த மாற்றம் சிறிதாகத் தெரிந்தாலும் பயனர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளப் பயனர்களின் விருப்பமான தேடுதளங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நிறுவனம் கூகுள். வலைதளத்தின் முகவரியை நன்கு அறிந்த பயனர்கள்கூட அதற்கு நேரடியாகச் செல்லாமல், கூகுளின் மூலமாகவே செல்வதுண்டு. அந்த அளவிற்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தேடுதளமாக இது உள்ளது. அப்படிப்பட்ட கூகுள் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களைக் கோபமடையச் செய்யும் வகையில் இன்று ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது.

கூகுள் தேடுதளத்தில் பொதுவாக ஒரு புகைப்படத்தைத் தேடும்போது அதன் கீழ் `விசிட்’, `சேவ்’, `வியூ இமேஜ்’, `ஷேர்’ ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும். அதில் `வியூ இமேஜ்’ பட்டனை கிளிக் செய்தால் அந்தப் புகைப்படம் மட்டும் பெரிதாகத் தோன்றும். புகைப்படங்களைத் தேடும் பயனர்களுக்கு அந்தப் புகைப்படத்தினை எச்.டி. தரத்துடன் பதிவிறக்கம் செய்ய இந்தப் பட்டன் உதவிகரமாக இருந்துவந்தது. தற்போது அந்தப் பட்டனை கூகுள் நிறுவனம் அதன் தேடுதல் பக்கத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில், “இன்று முதல் கூகுள் தேடுதல் பக்கத்தில் வலைதளங்களையும் பயனர்களையும் இணைக்கும் பொருட்டு ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி `வியூ இமேஜ்’ என்ற பட்டன் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக `விசிட்’ பட்டன் செயல்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் புகைப்படத்துடன் கூடிய தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது.

கூகுள் தேடலின் மூலம் மக்கள் எளிதில் தங்களின் புகைப்படங்களைத் திருடுவதாகப் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் புகைப்பட வெளியீட்டாளர்களிடமிருந்து நீண்ட காலமாகப் புகார்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தச் செய்தியை ஒரு வாரம் முன்பே `கெட்டி இமேஜஸ்’ நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தால் பயனர்கள் புகைப்படம் உள்ள வலைதளங்களுக்குச் சென்று அதிலிருந்துதான் படங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதன்படி புகைப்படம் பதிவிறக்கம் செய்ய வலைதளப் பக்கத்திற்குச் செல்லும்போது, அந்தப் பக்கத்தின் மூலம் கிடைக்கும் விளம்பரங்களின் மூலம் வருவாய் அதிகரிக்கக்கூடும். படத்தின் காப்புரிமை பற்றிய விவரங்களும் அந்தத் தளத்தில் இருக்கும். எனவே, கூகுளின் இந்த அறிவிப்பால் புகைப்படங்களின் காப்புரிமைக்குக் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Total Page Visits: 84 - Today Page Visits: 1