ரசிகர்களின் திடீர் முற்றுகையால் திண்டாடிய விஜய் (Video)

விஜய் நடித்துவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் சூழ்ந்து விஜய்யைத் திணறவைத்துள்ளனர்.

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார்கள் விஜய்யும் முருகதாஸும். விஜய்யின் 62ஆவது படமாக உருவாகிவரும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு மற்றும் பனையூர் பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது.

20 நாள்கள் வரை நடைபெறும் இதில் விஜய்யின் சேசிங் சம்பந்தமான காட்சிகளிலும் சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் கல்லூரி சம்பந்தமான படப்பிடிப்பு காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இது சம்பந்தமாக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாதா மருத்துவக் கல்லூரிக்குச் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த மாணவர்களும் ரசிகர்களும் ஆரவாரம் செய்து விஜய்யைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோ ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

கொல்கத்தா படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது. அங்கு 20 நாள்கள் வரை தங்கி பாடல் காட்சிகள் உட்பட சில காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பைரவா படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துவருகிறார் கீர்த்தி சுரேஷ்.

Total Page Visits: 80 - Today Page Visits: 3