பில்கேட்சுக்கு வந்த நிலை

Advertisement

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களுக்கான பட்டியலில் பில்கேட்ஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஹூரன் நிறுவனம் அதிக சொத்து மதிப்பு மிக்கவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் முன்னாள் நம்பர்.1 பணக்காரரான அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ் (62) மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இவர் சென்ற ஆண்டில் முதலிடத்தில் இருந்தார். மைக்ரோசாஃப்ட் நிறுவனரான இவரது சொத்து மதிப்பு தற்போது 90 பில்லியன் டாலராக இருக்கிறது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு வெறும் 11 சதவிகிதம் மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கொடி கட்டிப் பறந்த பில்கேட்ஸ் இந்த ஆண்டில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (54) முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு 71 சதவிகித உயர்வுடன் தற்போது 123 பில்லியன் டாலராக இருக்கிறது. சென்ற ஆண்டில் இரண்டாம் இடத்தில் இருந்த அமெரிக்காவின் வாரென் பஃபெட் (87) இந்த ஆண்டிலும் தனது இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இவரது சொத்து மதிப்பு (102 பில்லியன் டாலர்) இந்த ஆண்டில் 31 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 79 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறார்.

முன்னதாகக் கடந்த டிசம்பர் மாதம் புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டிருந்த உலக பணக்காரர்கள் பட்டியலிலும் பில்கேட்ஸ் சரிவைச் சந்தித்திருந்தார். அப்போது அவரது சொத்து மதிப்பு 91.3 பில்லியன் டாலராக இருந்தது. எனவே 99.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட ஜெஃப் பெசோஸ் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். 2013ஆம் ஆண்டின் மே மாதம் முதலே உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தார் என்பதும், இவரது பெரும்பாலான சொத்துகள் தொண்டு நிறுவனத்துக்குத் தானமளிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல, அந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் ஜெஃப் பெசோஸ் பணக்காரர் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியிருந்தார். ஆனால், ஒரு நாளுக்குள்ளேயே பெசோஸை பின்னுக்குத் தள்ளி பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Facebook Comments
Advertisement