கண்டியில் இன மோதல்கள் வெடிக்கும் பேராபத்து (Videos)

Advertisement

சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் தோன்றியுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

தெல்தெனியவில் கடந்தவாரம் மோதல் ஒன்றின் போது படுகாயமடைந்த சிங்களவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை மரணமானார்.

இதையடுத்து, நேற்று தெல்தெனிய பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

எனினும், தெல்தெனியவில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வாணிப நிலையங்களின் நேற்றிரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. சில வாகனங்களும் தாக்கப்பட்டன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அங்கு இன்று பதற்றநிலை அதிகரித்தது.

இன்று கண்டி- திகண பகுதியில் இரண்டு இனங்களையும் சேர்ந்த குழுக்களுக்கிடையில் மோதல்கள் வெடித்தன. மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.

அதேவேளை, தெல்தெனியவிலும் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நீர்ப் பீரங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலையைக் கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments
Advertisement