திருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்

Advertisement

பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் பற்றிய தகவல்களை கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம் அரசியல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திய விவகாரத்தில்,

தங்கள் நிறுவனம் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்.

பேஸ்புக், உலகம் முழுவதும் பல கோடிப் பேரால் பயன்படுத்தப்பட்டுவரும் சமூக வலைதளம். இதனைப் பயன்படுத்துபவர்கள் இதில், தங்களைப் பற்றிய பல்வேறு தகவல்களையும் பதிவுசெய்துள்ளனர்.

இந்தத் தகவல்களை மூன்றாவது நபர் பயன்படுத்தும் வகையில், 2014ஆம் ஆண்டில் சில மாற்றங்களைச் செய்தது பேஸ்புக் நிறுவனம்.

இதையடுத்து, சில பேஸ்புக் செயலிகள் மூலமாக அதனைப் பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்கள் முறைகேடாகத் திரட்டப்பட்டன.

இதன் பின்னணியில் அலெக்சாண்டர் கோஹன் என்ற ஆய்வாளர் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

பேஸ்புக்கிலிருந்து கிடைத்த சுமார் 5 கோடி பேர் பற்றிய தகவல்களை, லண்டனைச் சேர்ந்த கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனம்

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தியது. இதன் மூலமாகத்தான்,

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார் என்ற சர்ச்சை தற்போது அந்நாட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சேனல் 4 தொலைக்காட்சி இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், உலகம் முழுக்கப் பல நாடுகளில் இணையம் வழியாக அரசியல் பிரச்சாரத்தை நடத்திவருகிறது.

இந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தியதாக, நேற்று (மார்ச் 21) காங்கிரஸ் கட்சி மீது பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார்.

அதேநேரத்தில், கடந்த 2010ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், இன்று (மார்ச் 22) இந்த விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ”கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா தகவல் திருடிய பக்கங்கள் குறித்து,

சம்பந்தப்பட்ட பயனாளருக்கு பேஸ்புக் தகவல் தெரிவிக்கும். இதனை உரிய நேரத்தில் செய்யாததற்காக, நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சிறு வயதிலேயே பேஸ்புக் நிறுவனத்தைத் தொடங்கியதாகவும், தவறான நபர்களைத் தேர்ந்தெடுத்து சில பணிகளை வழங்கியதாகவும்,

அவர்கள் மீது நம்பிக்கை வைத்தது தவறென்று தற்போது உணர்ந்திருப்பதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.

“உங்களது தகவல்களைப் பாதுகாக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அதனைச் செய்யாவிடில் பேஸ்புக் அதற்கான தகுதியை இழந்துவிட்டதாக அர்த்தம்.

என்ன தவறு நடந்தது என்பதை முழுதாக அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இனிமேல், இதுமாதிரியான தவறுகள் நடக்காது என உறுதியளிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட செயலிகள் இனிமேல் பேஸ்புக்கில் பயன்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments
Total Page Visits: 7 - Today Page Visits: 6