மஹிந்த ராஜபக்ஸ மகனுக்கு அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

சிறிய தாயாரின் மரணச்சடங்கில் பங்கேற்க, மொஸ்கோவில் இருந்து, ஹொஸ்டனுக்குச் செல்ல முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ரஷ்யாவில் நடந்த தேர்தலைக் கண்காணிக்கச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், அவர் மொஸ்கோவில் இருந்து, அமெரிக்காவின் டொக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹொஸ்டன் நகருக்கு விமானத்தில் செல்ல முயன்றார்.

ஆனால், எமிரேட்ஸ் விமான சேவை அதிகாரிகள், நாமல் ராஜபக்சவை, விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.

நாமல் ராஜபக்சவை விமானத்தில் ஏற்ற வேண்டாம் என்று அமெரிக்க அதரிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக எமிரேட்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும், நாமல் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட தடைக்கான காரணத்தை அவர்கள் கூறவில்லை.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரான டட்லி ராஜபக்சவின், மனைவியான யதீந்திர ராஜபக்ச கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரணமானார்.

சிறிய தாயாரின் மரணச் சடங்கிற்குச் செல்ல முற்பட்ட போதே மொஸ்கோவில் நாமல் ராஜபக்ச தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

Facebook Comments