வித்தியாசமாக நடந்த பார்த்தீபன் மகள் திருமணம் !

திருமணம் என்றாலோ, வேறு எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலோ கவிதை நயமான பேச்சு, வித்தியாசமான பரிசுப்பொருள் என அனைத்திலும் வேறுபட்டு நிற்பவர் இயக்குநரும் நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

சமீபத்தில் அவரது மகள் கீர்த்தனா – சினிமா படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய் திருமணம் சென்னையில் நடைபெற்றது.

விழாவில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உட்பட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அந்தப் பரபரப்பான சூழலில் திருமணத்துக்கு வந்திருந்த பத்திரிகை நண்பர்களைப் பார்த்துப் பேச முடியாமல் போனதால்,

மணமக்களைப் பத்திரிகையாளர்கள் முன்பு அறிமுகம் செய்து வைக்க எண்ணி வரவேற்பு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

சென்னை வடபழனி சிகரம் ஹாலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சரியாக 11.45க்கு வந்தார். தெரிந்தவர் தெரியாதவர் என அனைவரையும் வரவேற்ற அவர்,

எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதையும் கவனித்து கொண்டார். பின்னர் ஒவ்வோர் இருக்கையாகச் சென்று அங்கு அமர்ந்திருந்தவர்களுக்குப் பொன்னாடை அளித்து வரவேற்றார்.

இதையடுத்து 12.45க்கு மேடைக்கு வந்த மணமக்கள், அனைவரது முன்னிலையிலும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் தனது மகளை வாழ்த்த வந்த அனைவரையும் மேடையேற்றி வாழ்த்துச் சொல்ல அழைத்தார் பார்த்திபன்.

மறக்க முடியாத தருணம் !

விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு துளசி செடி கொடுப்பது ஒருபக்கம், நடிகரும் பாடகருமான ஸ்ரீராம் இசைக்குழுவின் பாடல்கள் இன்னொருபக்கமென விறுவிறுப்பாக நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு இடையே, கீர்த்தனாவின் திருமணம் குறித்து அவரிடம் உரையாடியபோது, “என் வாழ்கையில் என் மகள் திருமணம் மிக முக்கியமான நிகழ்வு. மறக்க முடியாததும்கூட.

நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.‘ஏன் இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு?’ என்று கேட்டபோது,

“என்ன தான் வசதி வந்த பிறகு பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டாலும், பழைய கையேந்தி பவன்ல சாப்புடுற மாதிரி வருமா.

அதனாலதான் ஆரம்பத்துல இருந்து என் நலன்விரும்பிகளாக இருக்கும் ஊடகத்துறையை மறக்காமல் அழைத்தேன். நான் அழைத்த இன்விடேஷன்ல நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு போட்டிருந்தேன்.

சில பேர் நீ கூப்பிட்டா, நாங்க வரணுமான்னு சொல்லியிருந்தாங்க. அது எனக்கு ரொம்ப கவலையா இருந்துச்சி.

சாப்பாட்டை அவமதிக்கிறது தப்பான விஷயம்” என்று இந்த இனிமையான நிகழ்ச்சியிலும் தனக்கு ஏற்பட்ட கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

நான் வேறு மன நிலையில் இருந்தேன் !

அப்போது இயக்குநர் விஜய் பூங்கொத்துடன் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார். இதையடுத்து மீண்டும் தொடங்கிய உரையாடலில்,

“விழாவுக்குப் பல முக்கிய சினிமா பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். என் மகள் திருமணத்துக்கு நான் அழைத்த அனைவரும் வந்திருந்தார்கள்.

அதில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி. அப்போது நான் வேறு மனநிலையில் இருந்தேன். பல விஷயங்களை நான் கவனிக்கவே இல்லை. அந்த நிலைக்கு நான் தள்ளப்பட்டு இருந்தேன்.

ஆனால், யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்வது அபத்தமானது. அதனால் வந்திருந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

திருமணத்துக்கு வர முடியாத சிலர் போனில் அழைத்து வாழ்த்துகளைச் சொன்னார்கள். அவர்களுக்கும் என் நன்றி” என்று திருமணம் குறித்து விவரித்தார்.

‘யார் திருமணத்துக்குச் சென்றாலும் உங்கள் பரிசு வித்தியாசமானதாக இருக்குமே, உங்கள் வீட்டுத் திருமணத்துக்கு என்னென்ன பரிசுகள் வந்தது?’ என்ற கேள்வியை தொடர்ந்து சிரித்த அவர்,

“இன்னும் நான் அதைப் பார்க்கவில்லை. ஆனால், இப்போதுகூட பல பரிசுப்பொருள்கள் வந்துள்ளது. அதில் என் ரசிகர் ஒருவர் கீர்த்தனா அக்ஷய் பெயரை மரப்பலகையில் செய்துகொடுத்துள்ளார்.

அது என் மனதுக்கு மிக நெருக்கமானதாக இருக்கும்” என்று கூறினார்.பத்திரிகை தொழிலாளிகளாக இல்லாமல், குடும்ப நண்பர்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,

மணமக்களை வாழ்த்த அழைத்திருந்ததால், போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது நிகழ்ச்சியில் தவிர்க்கப்பட்டிருந்தது.

Facebook Comments