எது பாலியல் துன்புறுத்தல்?

எத்தகைய நடவடிக்கைகள் பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படக்கூடியவை என்பது குறித்துப் பலருக்கும் தெளிவு இல்லை என்று தோன்றுகிறது. அஸ்வினி கொலையை ஒட்டி இது பற்றிப் பேசலாம் என்று நினைக்கிறேன்.

பெண்ணைப் பொருளாக்குதல்

சில வாரங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழக விழா நடந்ததென அறிகிறேன். அங்கே வருகை தந்த பிரபல ஆளுமைகள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் கூடியிருந்த கூட்டத்தில் துணைவேந்தர் பேசிக்கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் பேச்சை நிறுத்திவிட்டு ஒரு மாணவியை ‘stand up’ என்கிறார். மாணவி பதற்றத்தோடு எழுந்து நிற்கிறார். துணைவேந்தர் ‘you are beautiful, sit down’ என்கிறார். மாணவி அமர்கிறார். இது ஒரு பெரிய கூட்டத்தில் நடக்கிறது (சில எழுத்தாளர்கள்கூட அங்கிருந்தார்கள் என்றார். என்னால் நம்பமுடியவில்லை!). இதுதான் பல்கலைக்கழகங்களின் நிலைமை என்றார் என்னிடம் இதைப் பகிர்ந்துகொண்ட கல்விப்புல நண்பர் ஒருவர்.

இது பாலியல் துன்புறுத்தலா என்றால் ஆமாம், துன்புறுத்தல்தான். இதைச் செய்பவரின் அதிகார இடத்தையும் அந்த மாணவியின் நிலையையும் இருவர் வயதையும் சமூக இடங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெண்ணைப் பொருளாக்கி நோக்கலைத்தானே அவர் செய்தது?

சென்ற பிறவியில் என்று சொல்லத்தக்க பல காலம் முன்பு நான் பணிபுரிந்த இடத்தில் உயர் உயர் மேலதிகாரி ஒருவர் முதன்முதலில் என்னை அலுவலக அறைக்கு அழைக்கிறார். கவிஞர் என்று கேள்விப்பட்டு ஞானபீட விருது கிடைக்க வேண்டும் என்று பாராட்டுகிறார். அதற்குப் பிறகுதான் விஷயமே. “இதற்கு முன் நான் வேலை செய்த இடத்தில் உங்களைப் போலவே தோற்றம் கொண்ட பெண் எனக்கு சிநேகிதியாக இருந்தாள். நீங்கள் என் சிநேகிதியாக இருக்க வேண்டும்” என்கிறார். என் கவிதை நூலைக் கேட்கிறார். நான் தரவில்லை, அது இருக்கட்டும்.

இந்த உயர் உயர் மேலதிகாரி, அவர் படிக்கட்டில் இறங்கிவரும் போது (பத்து அடி விஸ்தாரப் படிக்கட்டு அது) மேலே எதிர்முகமாக யாரும் ஏறி வரக் கூடாது என்பது விதி. ஒருமுறை நீல வண்ணச் சேலை அணிந்துகொண்டு ஓர் ஊழியர் எதிரே வந்துவிட்டார். உடனே உயர் உயர் அதிகாரி அன்றைக்கு நீல வண்ணச் சேலை கட்டியிருந்த எல்லாப் பெண்களும் தன் சேம்பரில் ஆஜராக வேண்டும் என்று ஆர்டர் போட்டாரே பார்க்க வேண்டும். ஆஜரானார்களா பெண்கள் என்று கேட்காதீர்கள். ஆமாம், செய்தார்கள் என்றுதான் கேள்வி. வேறுவழியின்றி. இது பாலியல் துன்புறுத்தலா என்றால் ஆமாம்.

பேருந்து, கூட்டம் போன்ற இடங்களில் தொடுவதோ, அமிலத்தை வீசுவதோ, பாலியல் வல்லுறவோ, போகிற இடமெல்லாம் பின்னால் வருவதோ மட்டும் பாலியல் துன்புறுத்தல் அல்ல. சமூகவியலாளர்களின் கருத்தில் கீழே நான் தந்திருப்பவை எல்லாமே பாலியல் துன்புறுத்தல்தான். இவற்றில் பலவற்றை நாம் சாதாரணமாக எதுவும் நடக்காததுபோல கடந்துவிடப் பழகியிருக்கிறோம். இவற்றில் பலவற்றை தமிழ்த் திரைப்படங்கள் இயல்பானவையாக சித்திரித்திருக்கின்றன. என்றாலும் உடனடியாக உதாரணம் வேண்டுமென்றால் களவாணி திரைப்படத்தைச் சொல்லலாம். ”என்னைக் கட்டிக்கறியா”, “கட்டிக்கறேன்னு சொல்லு” என்று பெண்களை (அதிலும் பள்ளி மாணவிகளை) மிரட்டுவது விளையாட்டு விடலைத்தனம் என்பதையும் தாண்டியதுதான். ஆனால், அதைச் செய்வது படத்தின் கதாநாயகன் என்கிறபோது தமிழ்ச் சமூகத்தில் கதாநாயகனின் குணவிசேஷங்களாக எவை இருக்கின்றன என்பது யோசிக்கத்தக்கது.

நம்மை நாமே கேட்டுக்கொள்வோமா?

திரைப்பட நாயகர்களைப் பற்றி வேறொரு பதிவில் விரிவாக விவாதிப்போம். இப்போது குறைந்தபட்சமாக, கீழே நான் தந்திருப்பவற்றில் ஏதாவதொன்றை நாம் செய்திருக்கிறோமா என்று ஆண்கள் (விரும்பினால்) கேட்டுக்கொள்ளலாம். இவற்றில் ஏதாவதொன்றை நாம் எதிர்கொண்டிருக்கிறோமா என்றால் இவற்றை நாம் எதிர்த்திருக்கிறோமோ, எதிர்த்திருக்காவிட்டால் எது நம்மை எதிர்க்கவிடாமல் தடுத்தது, தடையைத் தாண்டிச் செல்ல எத்தகைய தைரியத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பெண்கள் (விரும்பினால்) கேட்டுக்கொள்ளலாம்.

பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படுபவற்றில் சில:

(1) முறையாகப் பரிச்சயமில்லாத பெண்ணிடம் பேருந்து நிறுத்தம், உணவகம் போன்ற இடங்களில் வந்து வந்து பேசுதல்.

(2) ஒரு பெண்ணைப் பற்றி தொடர்ந்து அவள் தோழிகளிடமோ, பெற்றோரிடமோ, அவள் படிக்கும் / பணிபுரியும் இடத்திலோ விசாரித்தல்.

(3) தொலைபேசி எண்ணைக் கேட்டு நச்சரித்தல் அல்லது யார் மூலமாவது தெரிந்துகொள்ள யத்தனித்தல்; ஒருமுறை பார்த்தவுடனேயே தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தல்.

(4) ஒரு பெண் கேட்காதபோதே அவள் தொந்தரவுறும் வகையில் உதவிகள் செய்தல்.

(5) பெரிதாக அறிமுகமில்லாதபோதே பரிசுப் பொருள், வாழ்த்து அட்டைகள் அனுப்புதல்.

(6) ஒரு பெண் அறியாமல் அவளைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தல் (அந்தப் பத்திரிகை அட்டை நினைவுக்கு வருகிறதா?). அல்லது அவளது பொருள்களை (கைக்குட்டை, பூ போன்றவை) எடுத்து வைத்துக்கொள்ளுதல்.

(7) ஒரு பெண்ணைப் பற்றித் தொடர்ந்து, பொதுவான நண்பர்களிடம் அவளது தகவல்கள் (யாரையாவது காதலிக்கிறாளா, அவள் பொழுதுபோக்குகள் என்ன, மின்மடல் அல்லது வீட்டு முகவரி என்ன) விசாரித்து மன உளைச்சலை உண்டாக்குதல்.

(8) ஒரு பெண்ணின் வீடு, பணியிடம் அல்லது கல்லூரி போன்ற இடங்களுக்கு அடிக்கடி வந்து போகுதல், அவள் எப்போது வெளியே வருகிறாள், எங்கே போகிறாள் என்று நோட்டமிடல்.

(9) சொற்களால் துன்புறுத்தல், பிறரிடம் இழிவாக ஒரு பெண்ணின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் புறம்பேசுதல்.

(10) சந்திப்புக்காக நச்சரித்தல், பார்ட்டி போன்ற இடங்களில் பார்க்கும்போது பாலுறவு கொள்ளக் கோரிக்கை விடுத்தல்.

(11) பிற ஆண்களிடம் பேசினால் பொறாமை கொள்ளல், அதனால் பெண்ணை இழித்துப் பேசுதல் அல்லது வசைபாடுதல்.

(12) அடி, உதை, அமில வீச்சு, கத்திக் குத்து போன்ற துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, வல்லுறவு.

(13) அந்தப் பெண் எதைச் சொன்னாலும் உடனடியாக ஆமாம்சாமி போடுதல்.

(14) தற்கொலை செய்துகொள்வேன் அல்லது பெண்ணையோ அவளைச் சார்ந்தோரையோ கொலை செய்துவிடுவேன் என்பது போன்ற அச்சுறுத்தல்கள்; பெண்ணுடைய இடத்தை / பொருள்களை நாசப்படுத்தல்.

(15) ஏற்கெனவே காதல் உறவு இருந்து அது முடிந்துவிட்டது என்றால் முடிந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்தல், விடாப்பிடியாகத் தொல்லை செய்தல்.

(16) ஒற்றறிதல் (தானாகவோ, அட்மின் வைத்தோ).

(17) சமூக வலைதளங்களில் troll செய்தல், பதில் வராதபோதே தொடர்ந்து செய்தி அனுப்புதல்.

(18) அவளை ஓர் இடத்திலிருந்து போகவிடாமல் தடுத்தல் அல்லது அடைத்து வைத்தல்.

(19) பெண்ணுக்கு வருகிற கடிதங்கள் / செய்திகள் / பார்சல்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்தல் அல்லது அவளுக்குத் தெரியாமல் அவற்றைக் கைப்பற்றுதல்.

(20) ஓரளவு பரிச்சயம் வந்தவுடனேயே அவள் வீட்டுக்குச் சென்று அமர்தல், எழுந்து போகாமல் அடம்பிடித்தல்.

இன்னும் பல உண்டு. இவை சும்மா உதாரணங்கள். நாம் இவற்றில் சிலவற்றைக் காதலுற்றாலும் செய்கிறோமே என்ற கேள்வி வரலாம். இரண்டு பக்கத்திலும் காதல் இல்லாதபோது இதில் எதைச் செய்தாலுமே, யார் செய்தாலுமே பாலியல் துன்புறுத்தல்தான். பெண் செய்தாலும்தான். ஆனால், ஆண்களை ஒப்பிடுகையில் பெண்கள் இவற்றைச் செய்வது அபூர்வம் என்பது என் புரிதல்.

கடைசியாக, பாலியல் துன்புறுத்தல் பற்றிப் பேசும்போது சமூக, பண்பாட்டு மரபுகளில் இந்தத் துன்புறுத்தல் இடம் பெறுகிற விதத்தை அணுகுவதும் இன்றியமையாதது. பாலினக் கட்டமைப்புகளின் அடிப்படையில் பால் இச்சைகள், அவற்றின் இயல்பாக்கம் போன்றவற்றைப் புரிந்துகொள்ள ஒரு வகையில் அது உதவலாம். சங்க இலக்கியம் தொடங்கி இலக்கிய ஆக்கங்களில் தலைவன் மடலேறுதல், மடலூர்தல் என்ற வழக்கம் சொல்லப்படுகிறது. மடலேறுதலைப் பற்றி இப்படியொரு விவரணை இணையத்தில் கிடைக்கிறது:

‘மடல் என்பது இங்குப் பனைமட்டையைக் குறிக்கும். பனைமட்டைகள் கறுக்குகள் கொண்டவை. பல்லுப் பல்லாக இருக்கும் அந்தக் கறுக்குகள் உடம்பில் படும்போது கிழித்து ரத்தம் வரும். இந்தப் பனைமட்டைகளால் குதிரை உருவம் செய்வர். அதில் தலைவன் ஏறிக்கொள்வான். தோழர் குதிரையை இழுத்துக்கொண்டு தலைவி வாழும் ஊரில் தெருத் தெருவாகச் செல்வர். தலைவன் தான் விரும்பும் தலைவியின் பெயர் எழுதிய ஓவியம் ஒன்றை வைத்திருப்பான். அதைப் பார்த்த ஊர் மக்கள் தலைவன், தலைவி உறவைப் பற்றிப் பேசுவர். அவனுக்கு அவளை மணம் முடிக்குமாறு அவளது பெற்றோரிடம் கூறுவர்.’ ஆண், பெண் என்கிற பாலினங்கள் நெகிழ்வற்ற வகையில் தனித்தனியாகக் கட்டமைக்கப்பட்டு, அந்தக் கட்டமைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு பாலினத்துக்கும் ஏற்ற வகையில் இச்சைகள், உடற்குறிகள், இச்சைகளின் வழித்தடங்கள், இலக்குகள், இச்சைகளை வெளிப்படுத்தும் முறைகள் போன்றவற்றைத் தமிழ் இலக்கியப் பிரதிகள் இடையறாது குறிப்பிடுகின்றன. பெண்ணை வலியுறுத்தியோ, வற்புறுத்தியோ காதல் செய்வது இந்தக் கட்டமைப்புகளின் நீட்சியாகவும் உள்ளதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அத்தகைய கட்டமைப்புகளில் ஒன்றுதான் மடலேறுதல்.

மரபு சார்ந்த இத்தகைய பாலினக் கட்டமைப்புகளையும் அவற்றை அடியொற்றி அமையும் இச்சைகள் குறித்த சொல்லாடல்களையும் பெண் நிலை சார்ந்து தீவிரமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். இன்றைக்கு அவசியமாக முன்னெடுக்க வேண்டிய ஆய்வு அது.

Facebook Comments