சீனாவை மீண்டும் தாக்கும் கொரோனா ! ஒரே நாளில் 1290 பேர் பலி !

கொரோனா வைரஸ் இதுவரை 22 லட்சத்து 23 ஆயிரத்து 240 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 328 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இதற்கிடையில் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் பரவத் தொடங்கியது முதல் ஊரடங்கு உட்படப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட சீன அரசு வைரஸ் பரவும் வேகம் மற்றும் பலி எண்ணிக்கையை வெகுவாக குறைத்தது.

குறிப்பாகப் பெப்ரவரி மாதத்திற்குப் பின் அந்நாட்டில் வைரசுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது.

மேலும், கடந்த சில நாட்களாக வைரஸ் தாக்குதலுக்கு எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்ற நிலைக்கு வந்தது. இதனால் நிம்மதி அடைந்த சீன அரசு ஹூபேய் மாகாணத்தில் ஊரடங்கைத் தளர்த்திப் போக்குவரத்துக்கு அனுமதியளித்தது

இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிட்டோமென நினைத்துக்கொண்டிருந்த சீனாவுக்கு நேற்றைய நிலவரம் மரண அடி கொடுத்துள்ளது.

வைரஸ் பரவத் தொடங்கிய நாளிலிருந்து இத்தனை நாட்களில் நேற்று தான் சீனா அதிக உயிரிழப்புக்களை சந்தித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்புக்கள் அனைத்தும் வுகான் நகரில் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் 82 ஆயிரத்து 692 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 351 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் கொரோனாத் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர். இதனால், சீனாவில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக சீனாவில் பெப்ரவரி-23 ஆம் திகதி (150 பேர்) தான் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்திய நாளாகவிருந்தது. ஆனால், அந்தப் பலி எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் நேற்று ஒரே நாளில் அங்கு ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளமையால் அந்நாட்டு மக்களும், அரசாங்கமும் திகைத்து நிற்கின்றனர்.

இதேவேளை, வுகான் நகரில் ஒரே நேற்று நாளில் இத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் விவகாரத்தில் உண்மையாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையை சீனா மறைக்கிறதோ? என்ற கருத்துக்களும் மக்களிடையே எழுந்தவண்ணமுள்ளது.

கொரோனா வைரஸ் வெறியாட்டம்: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 4,600 பேர் சாவு!

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவை காட்டிலும், இப்போது அமெரிக்கா, அதன் பாதிப்புக்கு அதிகமாக ஆளாகி வருகிறது.

கொரோனா வைரஸ் வெறியாட்டம் போடுகிறது என்று சொல்கிற விதத்தில் கடந்த சில நாட்களாக அங்கு இந்த வைரசுக்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 4,591 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் ஏற்படுத்திய உயிர்ப்பலி எண்ணிக்கை, 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதற்கு முன் அமெரிக்காவில் கடந்த புதன்கிழமையன்று 2,569 பேர் உயிரிழந்ததே ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பாக இருந்தது.

மேலும் அங்கு இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது.

பாதிப்பு மற்றும் இறப்பு என இரு வகையிலும், அமெரிக்கா உலகின் வேறு எந்த நாட்டைக்காட்டிலும் அதிக எண்ணிக்கைகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுமையம் என்ற நிலையை எட்டியுள்ள நியூயார்க்கில், இந்த வைரஸ் நோய் 2 லட்சத்து 26 ஆயிரம் பேரை பாதித்து இருக்கிறது. 16 ஆயிரத்து 106 பேர் இறந்துள்ளனர்.

நியூஜெர்சியில் 75 ஆயிரத்து 317 பேரை இந்த நோய் தாக்கி இருக்கிறது. இதில் 3,518 பேர் இறந்திருக்கிறார்கள்.

இதற்கு மத்தியில் ஜனாதிபதி டிரம்ப், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில் 15 லட்சம் முதல் 22 லட்சம் பேர் வரை பலியாகக்கூடும் என கணிப்புகள் கூறின. ஆனால் கட்டுப்படுத்தாவிட்டால் இதை விட அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

இப்போது கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், பலியானது 1 லட்சம் முதல் 2 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கும்.

தற்போது வல்லுனர்கள் இந்த வைரசின் தாக்கம் தட்டையாகவே உள்ளது, அதிகரிக்கவில்லை என்கிறார்கள். புதிதாக தாக்குவது உச்சநிலையை கடந்து விட்டது.

கடந்த 7 நாட்களில், நாடு முழுவதும் 850 நகரங்களில் அல்லது 30 சதவீத மக்கள்தொகையில், ஒருவருக்குக்கூட இந்த வைரஸ் புதிதாக தாக்கவில்லை.

இதுவரை நாட்டில் 35 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Total Page Visits: 3179 - Today Page Visits: 2