உயிரியல் கடிகாரம் தவறாக ஓடினால்?

“மணி என்ன?”

“8.10”

“வீட்டுக் கடிகாரத்துல 8 தான் காட்டுது. சரியான நேரம் வைக்கிறதில்லையா?”

ஆபீஸ் கிளம்பும் அப்பா கடிந்துகொண்டார்.

“டிபன் சாப்பிட நேரமில்லை. நான் பார்த்துக்கிறேன்” என்று விருட்டென்று வெளியேறினார்.

வீட்டுக் கடிகாரம் தவறாக ஓடுவதைக் கண்டு கோபம் கொண்டவர், தன் உடலின் கடிகாரம் பாதிப்படைந்ததை உணரவில்லை. ஆம், ஒருவேளை உணவைத் தவிர்ப்பது, அதுவும் காலை உணவைத் தவிர்ப்பது நம் உடலின் அன்றாட நிகழ்வைப் பாதிக்கும் என்று நாம் ஏன் உணர்வதில்லை?

சரியாக ஓடாத கடிகாரத்தால் யாருக்கு என்ன பயன்? உயிரியல் கடிகாரமும் அதே போன்றுதான். எட்டு மணி நேரம் வேலை செய்துவிட்டு நாம் ஓய்வு எடுப்பதாக நினைத்தாலும், உடல் இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது? நம் உயிரியல் செயல்பாடுகள், உடலியல் மற்றும் மன மாற்றங்கள் உடலின் கடிகாரத்தைப் பொறுத்தே இருக்கின்றன. இதை சிர்க்கேடியன் ரிதம் (Circadian Rhythm) என்று அழைப்பார்கள். இதைச் சீராக இயங்க வைப்பது மூளையில் இருக்கும் மாஸ்டர் கடிகாரங்கள். இவைதாம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ள வைக்கும் நரம்பு செல்கள். உறங்குவது, எழுவது, உடலின் தட்பவெப்பம், உடல் திரவங்களைச் சரியான நிலையில் வைத்திருத்தல், இதர உடல் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் இந்த செல்கள்தாம் கட்டுப்படுத்து கின்றன.

மனிதர்களைப் பொறுத்தவரை, காலையில் விழித்திருக்க வேண்டும், இரவில் உறங்க வேண்டும். இடையில் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏன் இந்த வரைமுறை? சரியான நேரத்தில் உறக்கம் வரவைக்க உதவும் ஹார்மோன்தான் மெலடோனின் (Melatonin). இது பெரும்பாலும் நாம் உறங்கும்போது, வெளிச்சமற்ற இரவுகளில் சுரக்கிறது. இரவில் விழித்திருந்தால், தேவையான அளவு மெலடோனின் உருவாகாமல் போய்விடும். இதனால் உறங்க வேண்டிய நேரம் எது, விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் எது என்று உடல் குழப்பமடையும். காலை நேரத்தில் அலுவலகத்தில் உறக்கம் வருவது, உறக்கமின்மை அல்லது அதீத உறக்கம், பின் ஏற்படும் மோசமான பக்க விளைவுகள் எல்லாமே இதனால்தான்.

அதேபோல் நேரம் தவறி உணவு உட்கொள்வதும், அல்லது தேவையில்லாத நேரத்தில் நொறுக்குத் தீனிகள் தின்பதும் நம் உடலின் கடிகாரத்தைப் பாதிக்கும் செயலே! இவ்வாறு உங்கள் உடலை நீங்களே குழப்பும்போது அனைத்து இயக்கங்களும் பாதிக்கப் படுகின்றன. இதனால்தான், மருத்துவர்கள் நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும், காலை உணவைத் தவிர்க்கக் கூடாது, தேவையில்லாத நேரத்தில் உணவு உட்கொள்ளக் கூடாது என அறிவுறுத்துகிறார்கள்.

இந்த உயிரியல் கடிகாரம் செயல்படும் முறையைக் கண்டறிந்த விஞ்ஞானிகளான ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் டபிள்யூ.யங் ஆகியோருக்குத்தான் இந்த ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.

– ர.சீனிவாசன்

நன்றி – விகடன்