சமூகவலைத்தளங்களுக்கு நீங்கள் அடிமையா?

சமூக ஊடகங்கள் என்றதுமே நீங்கள் பயன்படுத்தும் சேவைகள் பளிச்சென நினைவுக்கு வரலாம். இவற்றில் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்கள், பார்த்து ரசிக்கும் வீடியோக்கள், மீம்களும் நினைவுக்கு வரலாம். உங்கள் சமூக ஊடக நட்பு வட்டங்களும் மனதில் நிழலாடலாம். இப்படிச் சமூக ஊடகங்களில் ஈடுபாடுகொண்டிருப்பது இந்தக் காலத்தில் இயல்பானதுதான். ஆனால், இந்த ஈடுபாடு எல்லை மீறாமல் இருப்பது முக்கியம்.

சமூக ஊடகச் செயல்பாடு அளவுக்கு மீறி அமையும்போது அதற்கு அடிமையாகிவிடும் வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் நேர விரயம், மன உளைச்சல் எனப் பாதிப்புகளுக்கு உள்ளாகலாம். எல்லாம் சரி, சமூக ஊடகப் பயன்பாடு அளவுக்கு மீறி நமக்குள் சென்றுகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன?

பணிக்குப் பதிலாக…

வேலையைப் பார்க்கலாம் எனும் உத்வேகத்துடன் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் முன் அமர்கிறீர்கள். மானிட்டர் உயிர் பெற்றதுமே உத்தேசித்த வேலையை மறந்துவிட்டு, ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் ஐக்கியமாகிவிடுவது உங்கள் பழக்கமாக இருந்தால், நிச்சயம் இதற்குக் கட்டுப்பாடு தேவை. வேலைக்கு முன்னுரிமை அளித்து, சமூக ஊடகச் செயல்பாட்டுக்கெனத் தனியே நேரம் ஒதுக்க வேண்டும். அலுவலகத்திலோ வீட்டிலோ பணி நிமித்தமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முற்படும்போது, வேலைக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். சமூக ஊடகத் தேவைகள் காத்திருக்கலாம், தவறில்லை.

ஸ்மார்ட்போன்

கம்ப்யூட்டர் முன் இல்லாதபோதும், ஸ்மார்ட்போனை எடுத்து வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கில் புதிய அப்டேட் வந்திருக்கிறதா எனப் பார்க்கும் பழக்கம் இருந்தாலும் சிக்கல்தான். ஸ்மார்ட்போன் என்பது அடிப்படையில் தொடர்புகொள்வதற்கான சாதனமே. அதன் இணைய வசதியைப் பணிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், ஸ்மார்ட்போனில் சில நிமிடங்களுக்கு ஒரு முறை புதிய நிலைத்தகவலைத் தேடிப் பார்ப்பது சமூக ஊடக ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்பதன் அடையாளம். அதேபோல, புதிய நோட்டிபிகேஷன் வந்திருக்கிறதோ இல்லையோ, அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கத் தோன்றினாலும் சிக்கல்தான். ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் கணக்கில் நுழைந்து பயன்படுத்தி வெளியே வந்துவிட்ட கணமே மீண்டும் அந்த நினைவு வரக் கூடாது.

கணக்கற்ற கணக்குகள்

சமூக ஊடகப் பரப்பில் எண்ணற்ற சேவைகள் இருக்கின்றன. இவற்றில் உங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்வுசெய்து பயன்படுத்தலாம், தவறில்லை. ஆனால், எதற்கு என்று தெரியாமலே பல சமூக ஊடக சேவைகளில் உறுப்பினராகப் பதிவுசெய்துகொண்டிருந்தீர்கள் என்றால், அதனால் நேரம் வீணாவதைத் தவிர்க்க முடியாது. அது மட்டுமல்ல, நம்பகத்தன்மை இல்லாத சேவைகள் மற்றும் செயலிகளில் எல்லாம் உறுப்பினராக இருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருக்கிறது.

காலையில் கவனம்

தினமும் காலையில் கண் விழித்ததும் காபி, டீ சாப்பிடுவதைவிட ஸ்மார்ட்போனை எடுத்து ஸ்டேட்டஸ் அப்டேட்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்களா? அப்படியானால் அதைத் தவிருங்கள். இது உங்கள் பொன்னான காலை நேரத்தைச் சோம்பல்மிக்கதாக மாற்றிவிடுவதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பையும் பாதிக்கலாம். அதே போல, இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்லும் முன் போன் பக்கம் செல்ல வேண்டாம். அதைவிடப் பாட்டு கேட்கலாம். புத்தகம் வாசிக்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசலாம்.

யார் நண்பர்கள்?

நண்பர்களோடு வெளியே செல்லும்போது, பரஸ்பரம் அரட்டை அடிப்பதைவிட, பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போனை எடுத்துப் பார்ப்பதிலும், செல்ஃபி எடுத்து அதைப் பதிவேற்றுவதிலும் மனம் செல்கிறதா? இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். அருகே இருக்கும் நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசுவதைவிட ஆன்லைன் நண்பர்கள் மீதான ஆர்வம் நல்லதா என யோசியுங்கள்.

மிகைப் பகிர்வு

மின்னல் கீற்றுபோல ஒரு எண்ணம் உதிக்கும்போது அதை உடனடியாக நிலைத்தகவலாகப் பகிர்ந்துகொள்ளலாம். நண்பர்கள் ஃபேஸ்புக் சுவரில் நல்லதொரு பதிவை வாசிக்க நேர்ந்தால் அதை ஒட்டி கருத்தாகப் பதிவுசெய்யலாம். தாக்கம் ஏற்படுத்திய நிகழ்வு தொடர்பாக ட்விட்டரில் குறும்பதிவு வெளியிடலாம். ஒரு நல்ல புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிரலாம். இதுபோன்ற செயல்பாடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ‘காலையில் காபி குடித்தேன், சுவையாக இருந்தது’ என்பதில் தொடங்கி எல்லாவற்றையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்தால், நிச்சயம் உங்கள் பகிர்வுப் பழக்கத்தில் மாற்றமும் கட்டுப்பாடும் தேவை. இத்தகைய மிகைப் பகிர்வு உங்கள் சமூக ஊடகச் செயல்பாட்டை அர்த்தமில்லாததாக மாற்றிவிடலாம்.

இந்தப் பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என உறுதி கொள்ளுங்கள். முடிந்தால், ஒரு நாள் அல்லது ஒரு வாரம் முழுவதும் சமூக ஊடகங்கள் பக்கம் செல்லாமல் இருந்து பார்ப்பது என்பதைச் சவாலாக எடுத்துக்கொள்ளுங்கள். இதைச் செயல்படுத்துவதிலேயே உங்கள் கட்டுப்பாட்டின் உறுதி தெரியவரும்.