சென்னை உட்பட நான்கு மாவட்டப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை மழை விடுமுறை

கனமழை நீடிப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்களில் மழை காரணமாக கடந்த 2 தினங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து விட்டு விட்டு கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இவற்றை வெளியேற்றும் முயற்சியில் ,மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கனமழை தொடர்ந்து நீடிப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, நெல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.