நானும் செவிலியர் தான்… ஜூலி – போலீஸுடன் தகராறு ! விரட்டியடித்த போலீஸ்

சென்னையில் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவரும் அரசு ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த செவிலியர் ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.

கடந்த 2015-ம் ஆண்டு 7,243 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கலந்தாய்வு மூலம் அவர்களுக்குப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. ஒப்பந்தக் காலத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது. குறைந்த ஊதியத்தில் பணியாற்றினாலும் அரசு வேலை என்பதால் பல்வேறு சிரமங்களை, பொருளாதார நெருக்கடிகளைச் சுமந்தபடியே செவிலியர்கள் வேலைபார்த்து வந்தனர்.

தற்போது, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் கடந்த மூன்று நாள்களாகச் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செவிலியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்கட்டமாக 200 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் ஒரு வருடம் கழித்து 1,000 செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகச் செவிலியர்களின் பிரதிநிதிகள் அறிவித்தனர். இதை ஏற்க செவிலியர்கள் மறுத்துவிட்டனர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே, இன்று காலை செவிலியர் ஜூலி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக டி.எம்.எஸ் வளாகத்துக்கு வந்தார். அவரைக் காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டனர். அப்போது, காவலர்களிடம், `நானும் செவிலியர்தான். என்னை அனுமதியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால், காவல்துறையினர் ஜூலியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து ஜூலி அங்கிருந்து சென்றுவிட்டார்.

மேலதிக செய்தி இணைப்பு

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், 32 மாவட்ட செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதுகுறித்து அறிய, போராட்ட வளாகத்தின் வெளியில் வண்டியை நிறுத்திவிட்டு, என் சகோதரியைச் சந்திக்கப்போவதாகக் காவல்துறையிடம் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தேன். ஒரு கழிப்பறையில் மட்டுமே தண்ணீர் வசதி இருப்பதால், ஏராளமான பெண்கள் கழிவறை வரிசையில் காத்திருந்தனர். அவர்களைக் கடந்து உள்ளே நுழைந்தேன். நான் நுழைந்தது காலை 10.30 மணிக்கு.

இப்போது செவிலியர்களின் குடும்பத்தினரையும் போலீஸ் உள்ளே அனுமதிப்பதில்லை. செவிலியர்களுக்கான ஐடி கார்டைக் காட்டினால் மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்களாம். இதை ஒருவர் சொன்னதும், ‘அப்பாடா நாம தப்பிச்சோம்டா சாமி’னு நினைத்தவாறு அவர்களுடன் பேச ஆரம்பித்தேன். செவிலியர்கள் என்னைச் சூழ்ந்து அமர்ந்து, தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள். செவிலியர்களின் நலன் கருதி, அவர்களின் பெயர், ஊர் மாற்றம் செய்திருக்கிறோம்.

”என் சொந்த ஊர் சென்னைதான். போஸ்டிங் போட்டது நாமக்கல். திருமணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறதால், அவரால் நாமக்கல்லுக்கு டிரான்ஸ்பர் வாங்கமுடியலை. ரெண்டு பசங்களை வெச்சுட்டு நாமக்கல்ல தனியா இருக்க முடியாததால், குழந்தைகளை என் கணவரும் மாமியாரும் பார்த்துகிறாங்க. குடும்பத்தை விட்டுட்டு தனியா வேலை பார்க்கிறோம். ஆனால், குடும்பத்தை நடத்தும் அளவுக்கு அடிப்படை வருமானம் இல்லை. ஏழாயிரமும், வருஷத்துக்கு ஒருமுறை கொடுக்கும் ஐந்நூறு ரூபாயும் எப்படி போதும்? ஜிஎஸ்டி அது இதுனு விலைவாசி எங்கேயோ போயிடுச்சு. எங்க கஷ்டத்தை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்றாங்க. ஒருநாள்கூட லீவ் போடாமல் மக்களுக்காகச் சேவை செய்றோம். முறைப்படி தேர்வு எழுதி பாஸ் ஆகியிருக்கோம். அதனால், எங்களுக்கான நியாயமான உரிமை வேணும்.”

”நேத்து பேச்சுவார்த்தை நடந்த பிறகு நிறையப் பேர் கலைஞ்சு போயிட்டாங்க. ஏன்னா, இங்கே போராடறவங்களை வேலையைவிட்டு நீக்கப்போறதா மிரட்டினாங்க. இந்த வேலை இருந்தால்தான் வீட்டுல கொஞ்சமாவது அடுப்பு எரியும்னு சிலர் கிளம்பிட்டாங்க. என் சொந்த ஊர் திருச்சி. ஆனால், தூத்துக்குடியில் வேலை பார்க்கிறேன். என் கணவருக்கு திருச்சியில் வேலை. எனக்குக் குழந்தைப் பிறந்து ஐந்து மாசம் ஆகுது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுறதுக்கு முன்னாடிவரை குழந்தையை என் அம்மா வீட்டுல விட்டிருந்தேன். குழந்தைக்குத் தாய்ப்பால்கூட முழுசா கொடுக்கமுடியாமல் பிறந்து ரெண்டு மாசத்திலேயே அம்மாகிட்ட விட்டுட்டு டியூட்டிக்கு போனேன். இவ்வளவு கம்மியா சம்பளம் கொடுத்தா எப்படி குடும்பத்தை ஓட்ட முடியும்? தேர்வு எழுதி பாஸ் ஆகிட்டால் நிரந்தர அரசு வேலைனு சொன்னாங்க. ஆனால், மூணு வருஷம் ஆகியும் ஒரு பதிலும் இல்லை. போராட்டத்திலிருந்து எத்தனை பேர் விலகினாலும் நாங்க கோரிக்கை நிறைவேறாமல் நகர மாட்டோம்.”

”வேற வேற ஊர்ல போஸ்டிங் போட்டாலும் பொறுத்துட்டு வேலை பார்க்கிறோம். மூணு நாளா குளிக்காமல் உட்கார்ந்திருக்கோம். பாத்ரூம்ல தண்ணீர் இல்லை. பீரயட்ஸோடு நிறைய பேர் கஷ்டப்படறோம். கைக்குழந்தையோடும் சிலர் போராட்டத்தில் இருக்காங்க. நேற்றுவரை சொந்தக்காரங்க வாங்கி வரும் சாப்பாட்டை சாப்பிட்டோம். இப்போ, அதுக்கும் பிரச்னை. எங்களுக்கு ஆதரவா அரசு தரப்பில் பதில் வரும்னு காத்திருக்கோம். நாங்க பணிக்குத் திரும்பலைன்னா நடவடிக்கை எடுக்கப்படும்னு மிரட்றாங்க. நாங்க என்ன வன்முறையிலா ஈடுபட்டிருக்கோம்? அகிம்சை முறையில் போராடும் எங்களை துன்புறுத்தறாங்க. எவ்வளவு துன்புறுத்தினாலும், மிரட்டினாலும் இந்தப் போராட்டத்தைக் கைவிடறதா இல்லை.”

பலரும் அவர்களது போராட்டத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள். யார் தடுத்தாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என முழங்குகிறார்கள். பேட்டி எடுக்கும் என்னை போலீஸ்காரர்கள் தடுத்து நிறுத்திவிடக் கூடாது என, மூன்று செவிலியர்கள் பேட்டி முடியும் வரை காவலாக இருந்து அவர்களது சகோதரிபோல நடத்தினார்கள்.

Total Page Visits: 115 - Today Page Visits: 1