ஐரோப்பா நோக்கி வந்த லிபிய நாட்டு அகதிகள் படகு மூழ்கியது ! இதுவரை 31 பேர் பலி ! தேடுதல் தீவிரம் .

உள்நாட்டுப்போர் நடந்து வருகிற லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் அகதிகள் செல்கின்றனர்.அவர்கள் படகுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இப்படி செல்கிற படகுகள், விபத்துக்குள்ளாகி பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படுவது மீளாத்துயரமாக அமைந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம், லிபியாவில் தலைநகர் திரிபோலியில் இருந்து 60 கி.மீ. கிழக்கே காராபுல்லி என்ற இடத்திற்கு அருகே மத்திய தரைக்கடல் பகுதியை அகதிகளின் படகு, மற்றொரு படகுடன் கடக்க முயன்றபோது கடலில் மூழ்கியது.

இது குறித்து அறிந்து, அங்கு விரைந்த கடலோர காவல் படையினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 60 பேரை பத்திரமாக மீட்டனர். 31 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த அகதிகளின் படகுடன் சென்ற மற்றொரு படகில் இருந்த 140 பேரும் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து பற்றி லிபியாவின் கடலோர காவல் படை உயர் அதிகாரி கர்னல் அபு அஜாலா கூறும்போது, “ நாங்கள் விரைவதற்கு முன்பாகவே அகதிகளின் முதல் படகு மூழ்கி விட்டது. அபாய சமிக்ஞை கேட்டுத்தான் நாங்கள் சென்றோம். அப்போதுதான் மற்றொரு படகிலும் அகதிகள் தத்தளித்ததை கண்டோம். இப்போது பருவநிலை சாதகமாக இருப்பதால், அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் செல்வது அதிகரித்து வருகிறது” என்றார்.

2000-2017 ஆண்டுகளுக்கு இடையே இப்படி ஆபத்தான படகு பயணம் மேற்கொண்டு 33 ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர் அல்லது காணாமல் போய் விட்டனர் என்று சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்பு கூறுகிறது. மத்திய தரைக்கடல் பகுதியை கடக்க முயன்றபோது மட்டும் 3 ஆயிரம் பேர் மூழ்கி விட்டதாக அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கிறது.

Total Page Visits: 91 - Today Page Visits: 1